அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதனால் உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி துக்ளக் சாலையில் வசித்து வந்த அரசு பங்களாவையும் காலி செய்ய உத்தரவிடப்பட்டார். அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை முறையிட இருக்கிறார் ராகுல் காந்தி. இதில் மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்யக்கோரும் அவர், வழக்கு விசாரணை முடியும் வரை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோர உள்ளார்.
மேலும் படிக்க | கொல்கத்தாவில் முதியவரை பாதித்த தாவர பூஞ்சை நோய் - உலகிலேயே முதல் பாதிப்பு
சூரத் நீதிமன்றத்தின் உத்தரவால் எம்பி பதவியை இழந்திருக்கும் ராகுல்காந்தி, அடுத்த 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நாளை நடைபெறும் விசாரணையில் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் அடுதடுத்த மேல்முறையீடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பினார். இதற்கு பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் தான் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார்.
ராகுல்காந்தி அண்மைக்காலமாக பிரதமர் மோடி மற்றும் அதானி தொடர்பு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். நாடாளுமன்றத்திலும் இது குறித்த பிரச்சனையை எழுப்பிய அவர், அதானிக்கு சொந்தமான ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பினார். இதனை நாடாளுமன்றத்தில் மீண்டும் பேசவும் ராகுல்காந்தி திட்டமிட்டிருந்த நிலையில், அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல்காந்தி தண்டிக்கப்பட்டது முழுக்க முழுக்க நீதிமன்ற நடவடிக்கை என தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் இருந்து அவர் நிவாரணம் பெற நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதில் எந்த பலனும் இல்லை என கூறியுள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அவதூறு வழக்கில் இதுவரை அதிகபட்ச தண்டனை யாருக்கும் விதிக்கப்படவில்லை. அதிகபட்ச தண்டனை ராகுல்காந்திக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த அவதூறு வழக்கை தொடர்ந்த பாஜக எம்எல்ஏவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாதபோது நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதித்த தண்டனை உகந்தல்ல என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோடி - அதானி விவகாரத்தை பேசக்கூடாது என்பதற்காக ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்டிருக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், புதிய விதி நாடு முழுவதும் அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ