‘சமாஜ்வாடி செக்குலர் மோட்சா’ என்ற தனிக்கட்சி தொடங்கிய சிவ்பால் யாதவ்

Last Updated : May 5, 2017, 04:39 PM IST
‘சமாஜ்வாடி செக்குலர் மோட்சா’ என்ற தனிக்கட்சி தொடங்கிய சிவ்பால் யாதவ்   title=

முலாயம் சிங் தலைமையில் தனிக்கட்சி தொடங்கிய சிவ்பால் யாதவ். ‘சமாஜ்வாடி செக்குலர் மோட்சா’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

1992-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியை ஆரம்பித்தார் முலாயம் சிங் யாதவ். அவரின் சகோதரர் சிவ்பால் யாதவ் கட்சியின் முக்கியத் தலைவராகவும், கட்சியின் முக்கிய பொறுப்புகளையும் கவனித்து வந்தார்.

ஆனால் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமாஜ்வாடி கட்சியில் விரிசல் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் மற்றும் சிவ்பால் யாதவ் இடையே மோதல் முற்றியது. கட்சியில் இருந்து தனது சித்தப்பாவை(சிவ்பால் யாதவ்) அகிலேஷ் யாதவ் நீக்கினார். இதனால், கட்சியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, முலாயம் சிங் யாதவ் கட்சியை இணைக்கும் பணி மேற்கொண்டார். ஆனால் ஆட்சி மற்றும் கட்சியில் யார் பெரியவர் என்று பிரச்னை கிளம்பியது. தந்தை-மகன் இவர்களுக்கு இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. கட்சிப் பெயர், சின்னம் யாருக்குச் சொந்தம் என்ற அளவுக்கு விவகாரம் வெடித்தது. 

இந்நிலையில் உ.பி., சட்டமன்ற தேர்தல் வந்ததால், தேர்தலுக்கு முன்பாக அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ் இணைந்தனர். ஆனால், உத்தரப்பிரதேசத் தேர்தலில் சமாஜ்வாடி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கவே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

அகிலேஷ் யாதவ் கட்சிப் பொறுப்புகளை முலாயம் சிங் யாதவிடம் ஒப்படைக்காவிட்டால், தனிக்கட்சி ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கடந்த வாரம் சிவ்பால் யாதவ் மிரட்டல் விடுத்திருந்தார். 

இந்தநிலையில், முலாயம்சிங் யாதவ் மரியாதையை மீட்டெடுக்கும் வகையில் தனிக்கட்சி தொடங்கப்படுவதாக இன்று சிவ்பால் யாதவ் தெரிவித்திருந்தார். புதிய கட்சிக்கு ‘சமாஜ்வாடி செக்குலர் மோட்சா’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். 

இதைக்குறித்து முலாயம் சிங் யாதவ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

Trending News