கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே அறிமுகப்படுத்தப்பட்ட உத்தரதேவி ரயில் என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டு நேற்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.
இந்த ரயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அதி விரைவு சொகுசு ரயிலின் முதல் சேவை நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தொடங்கியது.
கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த தொடக்க விழாவில், புதிய சேவையை அதிபர் மைத்ரிபால சிரிசேனா தொடங்கி வைத்தார். காலை 11 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், பிற்பகல் 2.40 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.
இந்த ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, உயர் வகுப்புப் பெட்டிகள் 2, இன்ஜின்களுடன் கூடிய 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் 7-ம் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 724 பேர் அமர்ந்து பயணிக்கலாம். 1,800 எச்பி குதிரைத் திறன் கொண்ட இந்த இன்ஜின் டீசல் மற்றும் மின்சாரத்தின் மூலம் இயங்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது.
நேற்று அறிமுகப் படுத்தப்பட்ட இந்த ரயிலில் அந்நாட்டு போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ் சித் சிங் சந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். யாழ்ப்பாணத்தில் பிரதான ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.