வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது!
பல்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதிகளுக்கு இந்தியா வாடகைத் தாய்களின் இருப்பிடமாக உருவாகி இருப்பதுடன், பண்புநெறியற்ற நடைமுறைகள், வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுதல், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைகளை கைவிடுதல் மற்றும் மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இடைத்தரகர்களின் மோசடிகள் போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்திய சட்ட ஆணையத்தின் 228-வது அறிக்கையிலும், வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தேவைப்படும் இந்திய தம்பதிகளுக்கு பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் மசோதா, தேசிய அளவில் தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவில், மாநில வாடகைத் தாய் வாரியங்கள் மற்றும் தக்க அமைப்புகளை ஏற்படுத்தி, இந்தியாவில் வாடகைத் தாய் பயன்படுத்துவதை ஒழுங்குப்படுத்தும் என தெரிகிறது.
இதன் மூலம் பண்புநெறி சார்ந்த வாடகைத்தாய் அமர்த்த விரும்பும் திருமணமாகி குழந்தையற்ற அனைத்து தம்பதிகளும் பயனடைவார்கள். மேலும், வாடகைத் தாய்கள் மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்த மசோதா ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ---
- வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற நினைப்பவர்கள் இந்திய தம்பதிகளாக இருத்தல் வேண்டும்.
- தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பெற தகுதி இல்லாமல் இருக்க வேண்டும்.
- வாடகைத்தாய் முறையை பயன்படுத்திக்கொள்ளும் பெண்ணுக்கு 23 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆணுக்கு 26 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.
- நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவரையே வாடகைத் தாயாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் வாடகை தாயும் திருமணமாகி குழந்தை பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவ செலவை தவிர வேறு எந்த வகையிலும் பணம் வழங்கப்படாது, எனினும் மருத்துவ செலவு, காப்பீட்டு செலவு போன்றவற்றை அவருக்குக் கொடுக்கலாம்.
- வாடகை தாய்க்கும், சம்பந்தப்பட்ட தம்பதிக்கும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும். மத்திய. மாநில அரசுகள் தகுதி சான்றிதழ்களை வழங்க தகுந்த அதிகாரிகளை நியமிக்கும்.
- வணிக ரீதியில் வாடகைத் தாய்களை பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, 10 லட்சம் அபராதம்