அகமதாபாத்: இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ரோட்ஷோவில் 70 லட்சம் பேர் அல்ல, ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக தனது சாலை நிகழ்ச்சியில் 7 மில்லியன் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறி ஒரு வீடியோவை டிரம்ப் வெளியிட்டிருந்தார். இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை டிரம்பின் கூற்றை விட மிகக் குறைவு. இதுக்குறித்து அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) கூறுகையில், பிப்ரவரி 24 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 22 கி.மீ நீளமுள்ள சாலை நிகழ்ச்சியின் போது சுமார் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24-25 தேதிகளில் இரண்டு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அவர் வாஷிங்டனிலிருந்து நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவார். அங்கிருந்து பிரதமர் மோடியுடன் சேர்ந்து மோட்டேரா ஸ்டேடியம் வரை 22 கி.மீ நீளமுள்ள ரோட்ஷோவில் கலந்து கொள்வார்.
நேற்று (புதன்கிழமை) டிரம்ப் வெளியிடப்பட்ட வீடியோவில், "'எனக்கு பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் பிடிக்கும். விமான நிலையம் முதல் மோட்டேரா ஸ்டேடியம் (அகமதாபாத்) வரை 7 மில்லியன் (70 லட்சம்) மக்கள் இருப்பார்கள் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். இது உலகின் மிகப்பெரிய அரங்கமாக இருக்கப்போகிறது. இது மிகவும் உற்சாகமாக இருக்கும்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த ரோட்ஷோவில் ஒரு லட்சம் பேர் கலந்துக்கொள வாய்ப்பு உள்ள நிலையில், ட்ரம்ப் கூறியதை அகமதாபாத் மாநகராட்சி அதிகாரி தானே நிராகரித்தார். அதாவது அகமதாபாத்தின் மொத்த மக்கள் தொகை 70 முதல் 80 லட்சம் ஆகும். சுமார் ஒரு லட்சம் பேர் இந்த ரோட்ஷோவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா புதன்கிழமை தெரிவித்தார். ரோட்ஷோ நிகழச்சி திட்டத்தின்படி, டிரம்ப் மற்றும் மோடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலில் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.