உத்திர பிரதேச மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், அவரது தங்கை பிரியங்கா, முழுமூச்சாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பிரசாரத்துக்கு இடையே, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழந்தைகளையும் பிரியங்கா சந்தித்தார்.
பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் பள்ளிச் சிறுவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பிரியங்காவை பார்த்து உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். பின்னர், காவலாளி ஒரு திருடன் என பொருள்படும் ‘சோக்கிதார் சோர் ஹே' என கத்தத் தொடங்கினர்.
சமீபத்தில் பிரதமர் மோடி காவல்காரன் என பொருள்படும் சோக்கிதார் பிரசாரத்தை தொடங்கிருந்தார். பாஜக தலைவர்கள் பலர் சமூக வலை தளங்களில் தங்களது பெயர்களுக்கு முன்பாக சோக்கிதார் என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர். இந்த வகையில் சோக்கிதார் என்றாலே அது மோடியை குறிக்கும் வார்த்தையாகவே மாறிவிட்டது. இந்த நிலையில், சிறுவர்கள் மோடியை திருடன் திருடன் என கத்தியதைப் பார்த்து பிரியங்கா காந்தி வாயடைத்து நின்றார். பின்னர் சிறுவர்களிடம், 'நீங்கள் சொல்வது சரியானது அல்ல. நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார்.
தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை எப்படி பயன்படுத்தலாம் என, விமர்சனங்களும் எழுந்தன. இப்பிரச்னையில், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், களமிறங்கி,. 'குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்; அந்த குழந்தைகள் குறித்த விபரங்களை கொடுங்கள்' என, பிரியங்காவிடம் கேட்டது. ஆனால், விபரங்களை அளிக்க, பிரியங்கா மறுத்துவிட்டார்.
இந்த பதில் தான் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த, ஆணையம், 'நீங்கள் கொடுக்காவிட்டாலும், அவர்கள் யார் என்பதை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம். அவர்களை யார் பிரசாரத்திற்கு அழைத்து வந்தனர் என்பதையும் அறிந்து கொண்டு, மீண்டும் உங்களிடம் வருவோம்' என தெரிவித்துள்ளது.
உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் தான் இந்த குழந்தைகளை பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்துள்ளனர் என கூறப்படுகிறது. ஆகையால் இந்த குழந்தைகள், ஆணையத்தின் விசாரணையில் சிக்கிவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் தரப்பு கண்டிப்பாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.