கடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் பின்னர் பாஜக வெற்றி முகத்தை நோக்கி பயணித்தது.
தற்போதைய நிலவரப்படி 111 தொகுதிகளில் பாஜகவும், 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில் கர்நாடகாவில் தனது நண்பர் எடியூரப்பா வரும் மே 18-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
இது குறித்து தனது இல்லத்தில் பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறும்போது..! வரும் 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்தார்.
மேலும், எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17-ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்தவர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.