கர்நாடக: மாயமான 2 எம்.எல்.ஏக்கள்! பின்னடைவை சந்தித்த காங்கிரஸ்!

கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  

Updated: May 19, 2018, 01:15 PM IST
கர்நாடக: மாயமான 2 எம்.எல்.ஏக்கள்! பின்னடைவை சந்தித்த காங்கிரஸ்!

எடியூரப்பா முதல்வராக பதவியேற்புக்கு எதிரான வழக்கில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டும்.

222 இடங்களுக்கு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கலும், காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனை ஏற்க மறுத்த கர்நாடகா ஆளுநர், அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக-வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதனை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டது. இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கர்நாடக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் தற்போது சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நடந்து முடிந்தது. தற்காலிக சபாநாயகர் போப்பையா எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாலை வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் இப்போதே எல்லோரும் பதவி ஏற்றாக வேண்டும்.

 கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பு அவர்கள் பதவி ஏற்கவில்லை என்றால், மாலை சபையில் காங்கிரஸ் - மஜத கட்சியின் பலம் 117ல் இருந்து, 105 ஆக குறையும். 

இதனால் அவையின் மொத்த பலம் 221ல் இருந்து 219 ஆக குறையும். இதனால் பெரும்பான்மையை நிருபிக்க 110 பேர் தேவைப்படுவார்கள். இதனால் பாஜகவிற்கு 6 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலை ஏற்படலாம்.