கேரளாவில் காதல் திருமணம் செய்த கெவின் பி ஜோசப் என்ற வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப். கடந்த இரண்டு வருடங்களாக கெவின் மற்றும் கொல்லம் பகுதியை சேர்ந்த நீனு என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் கெவின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்த கெவின் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். நீனு கொல்லம் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் துபாயில் இருந்து கடந்த ஜனவரி மாதம் கோட்டயம் திரும்பிய கெவின் நீனுவை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து அவரது பெற்றொரிடம் அனுமதி கேட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திர்ப்பு தெரிவித்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டு சூரியகவளாவில் உறவினர் அனிஷ் வீட்டில் தங்கியுள்ளனர்.
இதனையடுத்து நீனு பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு வரழைத்த காவலர்கள், நீனுவை அவருடைய பெற்றோர்களுடன் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நீனுவின் அண்ணன் உள்பட 12 பேர் திடீரென அனிஷ் வீட்டுக்குள் புகுந்து, கெவின், அனிஷ் ஆகியோரை தாக்கி கடத்திச்சென்றனர். இதில் அனிஷ் மட்டும் படுகாயத்துடன் திரும்பி வந்தார்.
இதனையடுத்து நீனு கெவினை அவரது கடத்திச்சென்று விட்டனர் என காந்திநகர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கெவினையும், மற்றும் நீனுவின் அண்ணனையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் கெவின் பிணமாக மிதப்பதாக புனலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வாலிபர் கெவின் கலப்பு திருமணம் செய்ததால் கவுரவ கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
தற்போது இதுதொடர்பாக நீனுவின் அண்ணன் சானுசாக்கோ, அவரது நண்பர்கள் ரியாஷ், நியாஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் நீனு கூறுகையில், எனது கணவர் கடத்தப்பட்டது குறித்து காந்திநகர் போலீசில் புகார் செய்தபோது ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக கேரள மனித உரிமை ஆணையம் காவல்துறை அறிக்கை கோரியுள்ளது.
இதையொட்டி டி.ஜி.பி. லோக்நாத் பெகரா, காந்திநகர் இன்ஸ்பெக்டர் சிபு, சப்-இன்ஸ்பெக்டர் சன்னிமோன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது ரபீக் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த கவுரவ கொலையை கண்டித்து இன்று கோட்டயம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.