கேரளா கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவா் சபரிமலைக்கு போக மாலையிட்டு விரதம் இருந்து வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கு ஆதரவாக இன்னும் சில பெண்கள் விரதம் இருக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து, தொடர்ச்சியாக எட்டு நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கடவுளை வணங்குவதில் ஆண் - பெண் பாகுபாடுக் கூடாது. கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் எனக் கூறி தீர்ப்பளித்தது. உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டும், தீர்ப்பை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போராட்டத்திற்குஇந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றாலும், அதேமாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த்(32) என்பவர், சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார். அதைக்குறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில்,
நான் கடந்த 12 வருடமாக ஒவ்வொரு வருடமும் மண்டல காலத்தில் 41 நாட்கள் ஐயப்பனுக்காக விரதம் இருந்து வருகிறேன். ஆனால் என் வயது பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்பதால், விரதம் மட்டும் இருப்பேன், மலைக்கு சென்றதில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில், இந்த வருடம் வழக்கம்போல விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல இருக்கிறேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தாரும், உறவினர்கள் இருக்கிறார்கள்.
இன்று நான் தனியாக இருக்கலாம், ஆனால் வரும் காலங்களில் நிறைய பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என நம்புகிறேன். கடவுளை தர்சிப்பதில் ஆண்-பெண் பாகுபாடுகள் இருக்ககூடாது.
எனது முடிவுக்கு அரசும், மக்களும் ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளார்.