வீரர்களின் பாதங்களில் வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்: வைரமுத்து!

அகிம்சா தேசம் பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா மன்னிகாது இனியும் என காட்டத்துடன் கவிஞர் வைரமுத்து! 

Last Updated : Feb 17, 2019, 10:05 AM IST
வீரர்களின் பாதங்களில் வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்: வைரமுத்து! title=

அகிம்சா தேசம் பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா மன்னிகாது இனியும் என காட்டத்துடன் கவிஞர் வைரமுத்து! 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை இந்தியா மன்னிக்காது என்றும், தீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம் எனவும் பேசி, கவிஞர் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 38 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எப்படி சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை...எப்படி பொறுப்போம் சிம்லா பனிக்கட்டிகள் சிவப்பாய் உறைவதை... ஏய் தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப்புறத்தில் அல்ல, கொல்லைப்புறத்தில். இந்திய வீரர் எவனும் கள்ளச்சாவு சாகமாட்டான். 

எங்கள் மரணத்தின் வாசல் நெஞ்சின் பக்கம் உள்ளது. முதுகு பக்கம் அல்ல. உயிரென்ற ஒரு பொருளே உலகின் பெரும் பொருள். அதனை மண்ணுக்கீன்ற மாவீரர்களே விழுகிறது உங்கள் பாதங்களில் வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர். 

ஓயமாட்டோம், சாயமாட்டோம். தேசிய கீதத்தில் ஒப்பாரி ராகம் ஒட்டாது, தேசிய கொடி அரை கம்பத்தில் நிற்காது. அகிம்சா தேசம் பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா மன்னிக்காது இனியும்.

மாவீரர்களே உங்கள் கருகிய சீருடைகளால் தீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம். இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம்.

நாய்கள் கனவு கண்டால் எலும்பு மழை பெய்யும். நாங்கள் கனவு கண்டால் ஆகாயம் அதிரும், நட்சத்திரம் உதிரும். மாவீரர்களே உங்கள் அஸ்திகளை கங்கை, காவிரியில் அல்ல, சத்துருக்களின் சாப்பாட்டில் கரைப்போம். சமாதானம் மட்டும் அல்ல மரணம்கூட ஒரு வழிப் பாதையல்ல" என அவர் பேசியுள்ளார். 

 

Trending News