ஒரு நாளின் தொடக்கத்தை நாம் ஆக்கப்பூர்வமான நேர்மறை எண்ணங்களோடு தொடங்கினால் அந்நாள் பொன்னாளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நேர்மறை சிந்தனைகளை ஏற்படுத்துவதில் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன.
சிலர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கலாம், சிலர் காலை எழுந்தவுடன் செய்தித்தாளின் முகத்தில் விழிக்காவிட்டால் அந்த நாள் முழுவதும் சரியில்லை என்று வருத்தப்படுவதை பார்த்திருக்கிறோம். பலர் உடற்பயிற்சி செய்வார்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைகளில் மும்முரமாகி ரோபாவாக மாறிவிடுவார்கள்.
ஆனால் ஒரு நாளின் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டியது நாம் மட்டுமே. நமது விழிப்புணர்வும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாலும் செயல்களை திட்டமிட்டு செயல்பட்டால், நினைத்த காரியங்கள் கைகூடும். மன அமைதி கிட்டும். பலரோ கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன்கள் கணிப்பைப் படித்து அதற்கு ஏற்றாற்போல தங்கள் நாளை கணிப்பார்கள்.
கணிப்புகள் ஒரு நாளை திட்டமிடுவது ஒருபுறம். நமது மனதை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நாம் என்ன முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்பதை திட்டமிட வேண்டியது நாம் தான்... ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் நாளை நல்லபடியாக துவங்குவோம்....
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே...
இது கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் எழுதியது...
“கோய்’ என்ற மீன் வகை ஒன்று உண்டு. ஜப்பானில் காணப்படும் இந்த மீனை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்த்தால் அது அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று அங்குலம் மட்டுமே வளரும்.
ஆனால், சற்று பெரிய தொட்டியில் வளர்த்தால் கோய் மீன் 8 அல்லது 10 அங்குலம் வரை வளரும். அதுவே சிறு குட்டையில் வளர்த்தால் கோய் மீன்கள் ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளருமாம்!
அதுவே குளத்தில் வளர்த்தால் இரண்டரை அடி முதல் மூன்றடி வரையும், மிகப் பெரிய ஏரியில் வளர்த்தால் ஐந்து அடி வரை வளரும் தன்மை கொண்டது கோய் மீன்கள்...
மனிதர்களும் கோய் மீனைப் போன்றவர்கள்தாம். சிறியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் வளர முடியாமல் போய்விடும்.
Read Also | ஆடிப்பட்டம் தேடி விதை என்பது முதுமொழி, ஆடித் தள்ளுபடிக்காக காத்திரு என்பது இன்றைய பழமொழி
உயர்ந்த செயல்களைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும். நமது சிந்தனை உயர உயர செயல்பாடும் மேம்பாடு அடையும். நமது மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும், வாழ்வும் வளம் பெறும். உயர்வும் தாழ்வும் நம் கையில் தான், நமது சிந்தனைப்போக்கில் தான் உள்ளது.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து - என்பது வள்ளுவனின் வாக்கன்றோ...
திடமான, தெளிவான ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்... வாழ்த்துக்கள்...