தொலைக்காட்சி சேனல்களை சந்தாதாரர்களின் விருப்ப படி தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கான காலக்கெடு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கூறியுள்ளது!
இந்திய தொலை தொடர்பு ஆணையமான டிராய் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தொலைகாட்சி சேனல்களை சந்தாதாரர்கள் விருப்ப படி தேர்வு செய்யும் நடைமுறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், சந்தாதாரர்களின் நலனை கருதி இந்த காலக்கெடு ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதாகவும், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டதாக டிராய் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் சுமார் 10 கோடி கேபிள் டிவி சந்தாதாரர்களில் 65 சதவிகிதம் பேரும், 6.7 கோடி டி.டி.எச். சந்தாதாரர்களில் 35 சதவிகிதம் பேரும் புதிய நடைமுறைக்கு மாறி விட்டதாக டிராய் கூறியுள்ளது. ஆனாலும், தொலைக்காட்சி சேனல்களை சந்தாதாரர்களே தேர்வு செய்யும் நடைமுறை புதியது என்பதால் சிலருக்கு தேர்வு செய்வதில் சிக்கல் உள்ளது என்றும், சில இடங்களில் சந்தாதாரர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையும், அவர்களுக்கு விருப்ப தேர்வு முறை குறித்த விழிப்புணர்வை கொண்டு வர முடியாத நிலையும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
சில இடங்களில் இணைய வசதி இல்லாத சந்தாதாரர்கள் அல்லது இணையத்தை பயன்படுத்தி விருப்ப தேர்வை செய்ய இயலாத சந்தாதாரர்கள், நேரடியாக கேபிள் நிறுவனத்தையோ, டி.டி.எச். நிறுவனத்தையோ நாடும் நிலை உள்ளது என்றும், வெகு சில இடங்களில் சந்தாதாரர் விருப்ப தேர்வு செய்யாமலேயே கட்டண சேனல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளதாகவும் இந்த நிலைபாடுகள் சந்தாதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் டிராய் குறிப்பிட்டுள்ளது.
புதிய நடைமுறைக்கு மாறும் போது சந்தாதார ர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படுவதை விரும்பவில்லை என்று டிராய் கூறியுள்ளது. விருப்ப தேர்வு முறைக்கு மாறாத சந்தாதாரர்களையும் மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் , இதில் யாருக்கும் எந்த சிரம மும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆபரேட்டர்கள் தெரிவித்ததை டிராய் குறிப்பிட்டுள்ளது. இதுவரை புதிய நடைமுறைக்கு மாறாத சந்தாதாரர்களுக்கு ஏற்ற மிகச்சரியான திட்டத்தை வடிவமைக்குமாறு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டிராய் கூறியுள்ளது.
மிக சரியான திட்டத்தின் கீழ் சந்தாதாரர் வழக்கமாக பார்க்கும் சேனல்கள், அவரது விருப்பமான மொழி சேனல்கள் மட்டுமின்றி பல்வேறு விதமான சேனல்களும் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஏற்கனவே சந்தாதாரர் செலுத்தும் மாதக் கட்டணத்தை விட கூடுதலாக சந்தா தொகை இருக்க கூடாது என்றும் டிராய் கட்டளை இட்டு உள்ளது. சந்தாதாரர்களின் நலன் காக்கும் பலமுனை நடவடிக்கைகளை ஆபரேட்டர்கள் எடுக்க வேண்டும் என்றும், நேரடியாக சந்தாதார ர்கள் அணுகுவது, தொலைபேசி மூலம் விளக்கம் அளிப்பது, உதவி மையம் மூலம் தொடர்பு கொள்வது, செல்போன் செயலிகள் மூலம் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, இணைய தளத்தில் வசதிகளை உருவாக்குவது என பலமுனை நடவடிக்கைகளை ஆபரேட்டர்கள் எடுக்க வேண்டுமென டிராய் வலியுறுத்தி உள்ளது.
சந்தாதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு விருப்பபடி சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிராய் தெரிவித்துள்ளது. மேலும் சந்தாதாரர்கள், தங்களின் சுய விருப்பத்தின் படி சேனல்களை தேர்வு செய்த 72 மணி நேரத்திற்குள் அவர்களுக்கான திட்டத்தை ஆபரேட்டர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் டிராய் வலியுறுத்தி உள்ளது.