என்னை குறித்தும் பெண்கள் குறித்தும் தவறாக பேசிய ராதாரவிக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளார்.
இது குறித்து நயன்தாரா விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
நடிகர் ராதாரவி ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பெண்களை பாலியல் ரீதியாக இழிவுப்படுத்தியும் பேசுவதை பார்வையாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்த கூடாது. இப்படி உற்சாகப்படுத்துவது நீடித்தால் ராதாரவி போன்றவர்கள் பெண்களை இழிவுப்படுத்தி தவறான கருத்தக்களை வெளியிட்டுக்கொண்டு இருப்பார்கள்.
மூத்த நடிகராகவும், அனுபமிக்கவராகவும் இருக்கும் ராதாரவி இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக தவறான பாதையில் வழிநடத்தும் காரியத்தை செய்கிறார். என்னை குறித்தும் பெண்கள் குறித்தும் தவறாக பேசிய ராதாரவிக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்கு மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை கூறியுள்ளார் நயன்தாரா.
பெண்களை இழிவாக பேசும் ஆண்களை பெற்றதும் ஒரு பெண் தான். பெண்களை கீழ்த்தரமாக பேசுவதம், பாலியல் ரீதியாக கருத்தை தெரிவிப்பதும் தான் பெருமை என்பதைப் போன்று சில ஆண்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நினைவிருக்க வேண்டும், அவர்களின் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்று,
கடவுள் எனக்கு திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடிக்கும் அற்புதமான வாய்ப்பை வழங்கி இருக்கிறார். பல்வேறு கதாப்பாத்திரங்களிலும் நான் நடிப்பதற்கு காரணம், எனது ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுப்போக்கை வழங்கவேண்டும் என்பதற்காகதான்.
நடிகர் ராதாரவி பெண்களை இழிவுப்படுத்தி பேசும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற புகார்கள் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, தென்னிந்தியர் நடிகர் சங்கத்தில் ஒரு உட்குழு அமைக்க வேண்டும் என்றும் நடிகை நயன்தாரா கேட்டுக்கொண்டுள்ளார்.
விசா கமிட்டி முறைப்படி, இந்த விசாரணை நடத்தப்படுமா? என்று கேள்வியும் எழுப்பி உள்ளார். இந்த சமயத்தில் எனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.