இயேசு உயிர்த்தெழுதல் குறித்து தவறாக பேசியதாக இசைஞானி இளையராஜா மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா, இயேசு உயிர்த்தெழுதல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், 'எனக்கு டாக்குமெண்டரி வீடியோ பார்ப்பது மிகவும் பிடிக்கும். சமீபத்தில் இயேசு உயிர்த்தெழுதல் பற்றிய ஆவணப்படம் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையே, இயேசு உயர்த்தெழுந்தார் என்பது தான். அந்த ஆவண படத்தில் இயேசு உயிர்த்தெழவில்லை என வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் உண்மையில் உயிர்த்தெழுந்தது ரமணர் மட்டும் தான். அவர் வாழக்கையில் தான் உயிர்த்தெழுதல் என்பது நிகழ்ந்துள்ளது. இதை அவரே சொல்லியிருக்கிறார். இதை ஏன் இந்த இசை நிகழ்ச்சியில் பேசுகிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. ரமண மகரிஷி என்னுடனேயே இருக்கிறார் என்பதற்கு திடீரென்று நான் அவரைப் பற்றி இங்கே பேசியதே சாட்சி" என்று பேசியுள்ளார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து, அவரது கருத்துக்கு சில கிறிஸ்தவ நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று (மார்ச் 27) அவரது வீட்டின் முன்பாக சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில் சென்னை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் இளையராஜா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்திய இளையராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.