)
2025 பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதையும் தாண்டி அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். கடைசியாக அஜித்தின் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துணிவு படம் வெளியானது. அதன் பிறகு தொடங்கப்பட்ட விடாமுயற்சி படம் நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடித்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் படம் தள்ளிப்போகும் என்று அறிவிப்பு வெளியானதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
விடாமுயற்சி அஜித்தின் 62 ஆவது படமாகும். மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் ஆரவ், ஆக்சன் கிங் அர்ஜுன், ரெஜினா ஆகியோர் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. கடந்த மாதம் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, அதன் பிறகு விடாமுயற்சி தான் பொங்கலுக்கு வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் இதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் விடாமுயற்சி படத்திலிருந்து அனிருத் இசையில் முதல் பாடலும் வெளியானது. இதனால் படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இருப்பினும் விடாமுயற்சி படம் இன்னும் சென்சருக்கு அனுப்பப்படவில்லை என்ற தகவல் கடந்த ஒரு வார காலமாக கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக இருந்தது. படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் இன்னும் சென்சாரருக்கு அனுப்பாதது ரிலீஸ் தேதி மாறுமா என்ற கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Wishing everyone a Happy New Year 2025!
— Lyca Productions (@LycaProductions) December 31, 2024
Due to unavoidable circumstances, the release of VIDAAMUYARCHI is postponed from PONGAL! Kindly stay tuned for further updates! The wait will be worth it! #Vidaamuyarchi #HappyNewYear pic.twitter.com/Xxt7sx1AMY
லைக்கா நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் அதனால் தான் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட அவர்களால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மறுபுறம் மகிழ் திருமேனி படத்தை இன்னும் முடித்துக் கொடுக்கவில்லை என்றும், இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல், அதற்கான ரீமேக் உரிமையை வாங்குவதில் பிரச்சனை நீடிப்பதாகவும், அதனால் தான் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாததால் வேறு சில படங்கள் பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழில் வணங்கான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ