Vidamuyarchi Release Date Postponed: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
துணிவு திரைப்படத்திற்கு பின்னர் அஜித் குமார் நடிப்பில் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது திரைப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். குட் பேட் அக்லி திரைப்படம் கோடை விடுமுறை நேரத்திலோ அல்லது மே 1ஆம் தேதி அன்றோ வெளியாகலாம் என கூறப்பட்டு வந்தது.
'Breakdown' தழுவல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் இதுவரை வெளிவந்த 'தடையறத் தாக்க', 'மீகாமன்', 'தடம்', 'கலகத் தலைவன்', ஆகிய ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு வெவ்வேறு அனுபவங்களை வழங்கியவை ஆகும். இதனால் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற மகிழ் திருமேனி நடிகர் அஜித்தை வைத்து ஹாலிவுட்டின் 'Breakdown' திரைப்படத்தை தழுவி எடுத்திருக்கிறார். இதனால் 'விடாமுயற்சி' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
லைகா நிறுவனமும் அஜித்தும் இணைந்த போது முதன்முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவனே ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படம் கைவிடப்பட்டு, அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில், மகிழ் திருமேனி விடாமுயற்சியை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து வருகிறார்.
ரிலீஸில் தாமதம்
விடாமுயற்சி டீசர் கடந்த மாதம் வெளியானது. அதில், 'பொங்கல் 2025'இல் படம் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் சமீபத்தில் வெளியான Sawadeeka பாடல் குறித்த அறிவிப்பிலோ, பாடல் வீடியோவிலோ, X பதிவுகளிலோ பொங்கல் வெளியீடு என்பது படக்குழுவினரால் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில் நாளை புத்தாண்டு பிறக்க இருக்கிறது, விடாமுயற்சி ஜன.10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில் படத்தின் விநியோக உரிமமோ யாருக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஹாலிவுட்டின் Breakdown திரைப்படத்தின் உரிமையை படக்குழுவினரால் தற்போது வரை வாங்க முடியவில்லை எனவும் அதனால்தான் பட வெளியீட்டில் தாமதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை.
நீடித்த குழப்பம்
டீசர் வெளியான பின்னரும் கூட படத்தில் இறுதி கட்ட வேலைகள் இருப்பதாகவும் அதன் படப்பிடிப்பை நிறைவு செய்தவுடன் விரைவாக வேலைகள் நடைபெற்று பொங்கலுக்கு படம் ரிலீசாகி விடும் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, தற்போதும் விடாமுயற்சி திரைப்படம் சென்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பொங்கலுக்கு வெளியாகும் என்பதில் எந்த அறிகுறியும் விடாமுயற்சி பட குழு காட்டாததால் ரசிகர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் குழப்பம் இருந்து வந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இன்றிரவு லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது. இதனால், பொங்கலை முன்னிட்டு வெளியாகாத விடாமுயற்சி திரைப்படம் எந்த தேதியில் வெளியாகும் என்பதும் இதில் குறிப்பிடப்படவில்லை.
இந்த அறிவிப்பால் பொங்கலை முன்னிட்டு அருண் விஜய் - பாலா கூட்டணியில் உருவாகியிருக்கும் வணங்கான் திரைப்படம் மட்டுமே வெளியாகும். கூடவே சின்ன பட்ஜெட் படங்கள் சில வெளியாகவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள துணிந்தவன்! ஜனவரி ரிலீஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ