பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளியீட்டை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை நம்மில் பலர் படித்திருப்போம். இந்நாவலை படிக்காதவர்கள் ஒரு வரலாற்றுப் பின்னணி கதை கொண்ட திரைப்படமாக மட்டுமே பொன்னியின் செல்வனை எதிர் பார்க்கின்றனர். ஆனால் அந்நாவலை படித்தவர்கள், கல்கியின் கற்பனைக்கு மனிரத்னம் எவ்வாறு உயிர் கொடுத்து நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் என்பதைக் காணவும், 5 பாகங்களும், 293 அத்தியாயங்களும் கொண்ட ஒரு நாவலை எவ்வாறு 6 மணி நேரத்தில் திரைக்குள் அடக்கியிருக்கிறார் என்பதைக் காணவும் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
பொதுவாக வரலாற்று திரைப்படம் என்பதே மிகச் சவாலான பணி தான். பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். ஆனால் பாகுபலியில் திரைப்படத்தில் கதாப்பாத்திரங்கள் என்பவை மிகக் குறைவுதான். ஆனால் பொன்னியின் செல்வனில், கதை மாந்தர்களையும் பிரம்மாண்டமாகப் படைத்திருப்பார் கல்கி. பாகுபலியில் அரியணைக்கான சண்டை என்பது இரு சகோதர்களுக்கிடையே மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், பொன்னியின் செல்வனிலோ, அரியணை சண்டைக்கான விதை, 3 தலைமுறைகளை உள்ளடக்கி இருக்கும்.
இந்தப் பின்னலை புரிந்துகொள்ளவும், நம் மனதில் பதிய வைக்கவும் நாவலின் போக்கில் திரும்பத் திரும்பப் பலமுறை கூறியிருப்பார் கல்கி. திரைப்படத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்காதவற்களுக்காக அதன் கதை மாந்தர்களுக்கிடையேயான தொடர்பைத் தற்போது பார்க்கலாம்.
விஜயாலய சோழருக்குப் பிறகு அவருடைய மகன் ஆதித்த சோழன் பட்டத்துக்கு வருகிறார். ஆதித்த சோழனுக்குப் பிறகு அவரது மகனான முதலாம் பராந்தக சோழன் பட்டத்து வந்தார். 46 ஆண்டு காலம் சோழ நாட்டை ஆட்சி செய்த இவர், கரிகால சோழனுக்குப் பிறகு சோழ வரலாற்றின் மாபெரும் மன்னர் ஆவார். இவரது காலத்தில் சோழ நாடு கன்னியாகுமரியில் இருந்து கிருஷ்ணா நதி வரை பரவியிருந்தது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேய்ந்ததும் இவரே.
முதலாம் பராந்தக சோழனுக்கு 3 மகன்கள். முதல் மகன் ராஜாதித்யர். 2-வது மகன் கண்டராதித்தர். 3-வது மகன் அரிஞ்சயன். பராந்தகரின் ஆட்சியின் இறுதிக்காலத்தில் வடக்கில் இருந்து ராஷ்டிரகூடர்கள் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது, அரக்கோணத்துக்கு அருகிலுள்ள தக்கோலம் எனும் ஊரில் இரு படையினருக்கும் போர் நடைபெற்றது. இந்தப் போரில் ராஷ்டிர கூடர்களை வீழ்த்தி, சோழர்களை வெற்றி பெறச் செய்தாலும், பராந்தகனின் மூத்த மகனான ராஜாதித்யன் போரில் வீரமரணம் அடைந்தார். ஒருவேளை ராஜாதித்யன் மரணமடையாவிட்டால், அவரே பராந்தகனுக்குப் பிறகு அரியணை ஏறியிருப்பார். ஆனால், சந்ததி இல்லாமல் அவர் மரணமடைந்ததால், அவருடைய இளைய சகோதரரான கண்டராதித்தர் சிங்காதனம் ஏறினார்.
சிவனின் மேல் அதிக பக்தி கொண்ட இவர் ஆட்சிப் பொறுப்பேற்பதில் அதிக ஆர்வம் கொள்ளவில்லை. ஆலய வழிபாட்டிலும், இலக்கியத்திலுமே இவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிம்மாசனத்தில் கண்டராதித்தர் இருந்தாலும் அவரது இளைய சகோதரரான அரிஞ்சய சோழரே ராஜ்ய விவகாரங்களை கவனித்து வந்தார்.
விரைவிலேயே அரிஞ்சயனுக்கு பட்டம் சூட்டிய அவர், தனக்கு பின் அரிஞ்சயனும் அவரது சந்ததியருமே ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள் என அறிவித்தார். அதற்குக் காரணமும் இருந்தது. கண்டராதித்தரின் மனைவி அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே மரணமடைந்தார். கண்டராதித்தருக்கு வாரிசு இல்லாத நிலையில், அரிஞ்சயனுக்கு அழகும் ஆற்றலும் மிகுந்த மகன் இருந்தார். அவரே நம் கதையின் தூண்களாகிய ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மனின் தந்தை சுந்தர சோழர். தனது முடிவுக்கு அனைத்துத் தரப்பினரின் சம்மதத்தையும் பெற்று ஒரு மனதாக அறிவித்தார் கண்டராதித்தர். இவ்வாறாக, ராஜாதித்யன், கண்டராதித்தர் ஆகிய இருவரையும் தாண்டி அரிஞ்சயனின் வம்சத்திற்கு சோழ சிங்காதானம் உரிமையாகியது.
இந்த நிலையில் தான் கண்டராதித்தரின் வாழ்வில் ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. மனைவியின் மறைவுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளாத கண்டராதித்தர், நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னைப்போலவே சிவ பக்தியில் திளைத்த மழவரையன் எனும் சிற்றரசரின் மகளான செம்பியன் மாதேவியைத் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்தக் குழந்தையினால் ராஜ்யத்தில் என்ற மாற்றமும் இல்லை எனவும், தங்களது குழந்தையை சிவ பக்தனாகவே வளர்க்க விரும்புவதாகவும் இருவரும் ஒரு மனதாக அறிவித்தனர்.
கதைப்படி கண்டராதித்தனின் மகனான சேந்தன் அமுதன் பேச முடியாத தாய் ஒருவரால் வளர்க்கப்படுவார். இதன் பின்னணியை காண்பதற்கு முன் சுந்தர சோழரின் வாரிசுகள் குறித்து தற்போது பார்ப்போம். ஏனெனின் பொன்னியின் செல்வன் முழுவதும் நம்மோடு பயணிக்கப் போகிறவர்கள் இவர்களே.
சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், அருள் மொழி வர்மன் என இரு மகன்களும், குந்தவை என ஒரு மகளும் உண்டு. அவரது மனைவி பெயர் வானவன் மாதேவி. இவர் குறுநில மன்னரான திருக்கோவலூர் மலையமானின் மகள் ஆவார்.
கப்பல் விபத்தில் சிக்கி தீவு ஒன்றில் சிக்கிய சுந்தர சோழர், அங்குள்ள மந்தாகினி எனும் வாய் பேச இயலாத ஒரு பெண்ணின் மீது காதல் கொள்வார். காலத்தின் கட்டாயத்தால் இவர்களது காதல் ஈடேறாது. கலங்கரை விளக்கத்தில் இருந்து குதித்து அதிர்ச்சியடைந்து பழைய நினைவுகளை மறந்த மந்தாகினி தேவி மீது வீர பாண்டியனும் காதல் கொள்வார். இவர்களது மகளே முக்கியக் கதாபாத்திரமான நந்தினி எனக் கருதப்படுகிறது. மேலும், செம்பியன் மாதேவியின் மகனாக, சோழ அரண்மனையில் வளர்க்கப்படும் மதுராந்தகன், ஊமை ராணியின் மகன் ஆவார்.
மேலும் படிக்க | PS1 Release: ’எக்ஸாம் மனநிலையில் இருக்கிறேன்’ பதட்டமாக பேசும் நடிகர் கார்த்தி
இந்த ஊமை ராணிக்கு கோடியக்கரையில் தியாகவிடங்கர் எனும் படகோட்டி அண்ணனும், வாணியம்மை என்ற அவரைப் போலவே வாய் பேச இயலாத தங்கையும் உண்டு. இந்த வாணியம்மை தான், பின்னாளில் உத்தம சோழன் என அழைக்கப்பட்ட கண்டராதித்தர் - செம்பியன் மாதேவியின் மகன் சேந்தன் அமுதனை எடுத்து வளர்ப்பார்.
தியாகவிடங்கருக்கு பூங்குழலி என்ற மகளும், முருகைய்யன் என்ற மகனும் உண்டு. படகோட்டுவதில் வல்லவளான பூங்குழலி, சேந்தன் அமுதனை மணந்து கொள்வார். சுந்தர சோழரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூவர், இக்கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள். முதலாமவர், ராஜ தந்திரத்தில் வல்லவரான முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர். இவரது பிரதான சீடனே ஒற்றறிதலில் சிறந்தவரான ஆழ்வார்க்கடியான் நம்பி எனப்படும் திருமலை.
அடுத்தவர் கருவூலப் பொறுப்பாளரான பெரிய பழுவேட்டரையர். 24 போர்களில் பங்கேற்று தனது உடலில் 64 விழுப்புண்களைப் பெற்றவரான பெரிய பழுவேட்டரையரை, வயதில் முதியவர் ஆகினும் நந்தினி திருமணம் செய்து கொள்வார். சோழ வம்சத்தின் மீது தனக்குள்ள வன்மத்தைத் தீர்க்க பெரிய பழுவேட்டரையரை பகடைக்காயாகப் பயன்படுத்துவார் நந்தினி. சுந்தர சோழரின் அமைச்சரவையில் 3-வது முக்கிய நபர் சின்னப் பழுவேட்டரையர். இவரே கோட்டையின் தளபதி ஆவார்.
இக்கதையில், கடம்பூர் சம்புவரையர், கொடும்பாளூர் பெரிய வேளார் என அழைக்கப்படும் பூதி விக்ரம கேசரி ஆகிய குறுநில மன்னர்களும் இக்கதையில் இடம் பெறுவர். கொடும்பாளூர் பெரிய வேளாரின் தம்பி மகளான வானதி, சுந்தர சோழரின் மூத்த மகளான குந்தவையின் நெருங்கிய தோழி ஆவார். பின்னர் இவரே அருள்மொழி வர்மனை மணந்து கொள்வார். கடம்பூர் சம்புவரையருக்கு கந்த மாறன் என்ற மகனும், மணி மேகலை என்ற மகளும் உண்டு.
கந்தன் மாறன் கதையின் நாயகனாகிய வந்தியத்தேவனின் நண்பனாக அறிமுகமாகி பின்னர் நந்தினியின் சூழ்ச்சியில் சிக்கி,வந்தியத் தேவனை எதிரியாகக் கருதுவார். கந்தன் மாறனின் தங்கை மணிமேகலை வந்தியத் தேவை ஒரு தலையாகக் காதலித்து பின்னர் மனநிலை பாதிக்கப்படுவாள்.
இதுபோக பாண்டிய மன்னனின் தோல்விக்கு பழிதீர்ப்பதற்காக தலைமறைவாக வாழும் பாண்டிய ஆபத்துதவிகள் ரவிதாசன், சோமன் சாம்பவன், இடும்பன்காரி, தேவராளன், ரேவதாச கிரமவித்தன் ஆகியோர் ஆவர். இவர்கள் நந்தினியின் உதவியுடன் சோழ நாட்டை வீழ்த்த பல திட்டங்கள் தீட்டுவர்.
ஆதித்த கரிகாலனின் நண்பனாக அறிமுகமாகும் பார்த்திபேந்திர பல்லவன், கந்தமாறனைப் போல் நந்தினியின் சூழ்ச்சியில் வந்தியத் தேவனை எதிரியாகக் கருதுவார். கடைசியாக நம் கதையின் நாயகன் வாணர் குலத்து வீரன் வந்தியத் தேவன். ஆதித்த கரிகாலனின் நண்பனாக, இளைய பிராட்டி குந்தவைக்கு ஓலை கொண்டு செல்லும் அவர், அவரது நம்பிக்கையைப் பெற்றதனால், குந்தவையிடமிருந்து பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மனுக்கு ஓலை கொண்டு செல்வார். கடைசியில் குந்தவையைக் கைப்பிடிப்பவரும் அவரே.
வரலாற்று புனைவுக் கதையான பொன்னியின் செல்வனில், மந்தாகினி தேவி தொடர்புடைய அனைத்துக் கதாபாத்திரங்களும் கற்பனைக் கதாபாத்திரங்களே. இது வரலாற்றுப் புனைவு நாவல் என்பதால் ஏற்கனவே வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள், மாந்தர்களோடு கற்பனைக் கதாபாத்திரங்களையும் இணைத்து கல்கி அளித்த பொன்னியின் செல்வன் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. புத்தகத்தைப் படிக்கும் போது ஒவ்வொருவரின் கற்பனைக்கு ஏற்றவாறு அதன் பிரம்மாண்டம் வேறு பட்டிருக்கும். அதனை கண்முன்னே கொண்டு வருவதில் மணிரத்னம் எவ்வளவு தூரம் வெற்றி அடைந்துள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ஏ.ஆர். ரஹ்மானுக்குள் ஏற்படுத்திய மாற்றம்...
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ