சூர்யாவின் சிங்கம்-3 படத்தின் விமர்சனம்

Last Updated : Feb 11, 2017, 09:10 AM IST
சூர்யாவின் சிங்கம்-3 படத்தின் விமர்சனம் title=

ஞானவேல் ராஜா தயாரிபில், ஹரியின் மிரட்டல் திரைக்கதையில் சிங்கம்-3 நேற்று முன்தினம் வெளியானது. இதில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு பாகங்கங்களும் வெற்றி பெற்றது. இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் இந்த படம் முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3- எடுத்திருக்கிறார் ஹரி. 

விசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் ஆந்திரா வந்ததுமே பின் தொடர ஆரம்பிக்கிறார் ஸ்ருதி ஹாஸன். 

இந்த போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொலையில், வெளிநாட்டிலிருந்து விஷக் கழிவுகளைக் கொண்டுவந்து இந்தியாவில் எரிக்கும், காலாவதியான மருந்துகளை இந்தியாவில் விற்று காசு பார்க்கும் கொடிய கும்பல், அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல்வாதிகள் பின்னணி இருப்பதை சூர்யா கண்டுபிடிக்கிறார். 

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சூர்யா எப்படித் தண்டிக்கிறார் என்ற கதைதான் சிங்கம்-3. சி3 எனும் சிங்கம் 3 படத்தைப் பார்க்கும் யாரையும் யோசிக்கவே விடவில்லை ஹரி. பரபரவென நகர்கின்ற காட்சிகள். அதே நேரம் காதைக் கிழிக்கிறது சத்தம்.

முதல் இரு பாகங்களில் வந்த அதே துரை சிங்கம் சூர்யா. ஆனால் முந்தைய இரு பாகங்களை விட இதில் கூடுதல் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். வசன உச்சரிப்பில் அனல். 

முதல் பாகத்தில் அனுஷ்காவை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள், அவர் சூர்யாவுடன் திருமணமாகி, குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்கள், ஆனால், அவர் தொடர்ந்து சூர்யாவுடன் டூயட் பாடினால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள், அதுவும் இந்த உடம்பை வைத்துக் கொண்டு.

துப்பறியும் பத்திரிகையாளராக வரும் ஸ்ருதி, வழக்கம் போல சூர்யாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். முந்தைய படத்தில் ஹன்சிகா செய்ததைத்தான் இதில் ஸ்ருதி செய்கிறார். பெரிதாகக் கவரவில்லை. சூரியுடன் அவரது காமெடிக் காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. 

ரோபோ சங்கர் - சூரி காமெடிக் காட்சிகள் வருவதும் தெரியவில்லை, கடந்து போவதும் தெரியவில்லை. அத்தனை வேகம். படத்தில் இரண்டு வில்லன்கள். ஏகப்பட்ட பாத்திரங்கள். 

ரசிகர்களை சீட் நுணியில் அமர வைக்க வேகமான திரைக்கதை முக்கியம் தான், அதற்காக காட்சிகளையும் வேகமாக நகர்த்துகிறேன் என்ற பெயரில், வீடியோ கேம் விளையாடுவது போல இயக்குநர் ஹரி படத்தை இயக்கிஉள்ளார்.

அனால் விர்ர்ர்ரெனப் பறக்கும்  திரைக்கதைதான் சிங்கம்-3. பக்காவான ஆக்‌ஷன் கமர்ஷியல் பேக்கேஜாக வந்திருக்கும் சி3ன் வேட்டை தொடரும் என்றுதான் முடிக்கிறார்கள். 

Trending News