நீட் தேர்வு எழுதுவதில் தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது:-
“நீட் தேர்வு எழுதுவதில் தமிழக மாணவர்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா மற்றும்நீட் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. இது சிபிஎஸ்இ செய்த குளறுபடி இதை மத்திய, மாநில அரசுகள் முதலில் கவனம் செலுத்தி அந்தந்த மாநிலத்திலேயே மாணவர்களை நீட் தேர்வு எழுத வைத்திருக்கவேண்டும்.
மேலும் cbse-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தேர்வுக்கு குறுகிய காலம் இருப்பதால் இனிமேல் தேர்வு மையங்களை மாற்ற இயலாது என்றும், அடுத்த ஆண்டு இதுபோன்ற தவறுகள் நடக்காதவண்ணம் cbse பார்த்துக்கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மத்தியில் குழப்பத்தையும், வேதனையும் அளித்திருகிறது. மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை சிபிஎஸ்இ, மத்திய, மாநில அரசும் தான் செய்திருக்கவேண்டும்.
ஆனால், அறிவிப்பு வெளியிட்ட பிறகு மாணவர்களுக்கு இடையூறு வரும் என்று தெரிந்தபிறகு யோசிப்பது “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்வதற்கு சமம். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம், பாதுகாக்க வேண்டிய இந்த ஆளும் தமிழக அரசின் கடமை. வெளி மாநிலங்களைப் போன்று எந்தவொரு சிறிய குறைபாடுகளும் இல்லாத வகையில் நமது மாணவர்கள் நீட் தேர்வு எழுதினால் தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரவேற்கும்.
வெளி மாநில மாணவர்களை தமிழகத்தில் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கப்படாமல், தமிழக மாணவர்களை மட்டும் வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத மையங்களை ஒதுக்கியிருப்பது மத்திய அரசு தமிழகத்தை “மாற்றாந்தாய் மனப்பான்மையோடு” நடப்பதற்கு சமமாக கருத்தப்படுகிறது. ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், மத்திய அரசு கர்நாடக மாநில தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தற்போது நீட் தேர்விலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது. தமிழக அரசு கடைசி நிமிடத்தில் முன்பணமாக ஆயிரம் ரூபாய் என்று அறிவித்திருப்பதை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ஆகும் முழு செலவையும் தமிழக அரசே ஏற்கவேண்டும்.”
இவ்வாறு விஜயகாந்த் தந்து அறிக்கையில் கூறியுள்ளார்.