டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து இப்போது குரூப்8 போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய அணி முதல் ஆடத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்திருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.
டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி, சூப்பர் 8 சுற்று ஆட்டத்தை தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
வெஸ்ட் இண்டீஸில் இருக்கும் பர்படாஸ் மைதானத்தில் நடக்கும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அந்த மைதானத்தில் நிறைய போட்டிகள் ஏற்கனவே விளையாடிய அனுபவம் இருப்பதாக தெரிவித்தார்.
நியூயார்க் உள்ளிட்ட மைதானங்களில் இந்த தொடரில் அதிகம் விளையாடியிருந்தாலும், கடந்த இரண்டு நாட்களாக பார்படாஸில் இருந்து மைதானத்தின் சூழலை நன்கு உணர்ந்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.
பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானமாகவும், சுழற்பந்துவீச்சுக்கு உகந்த மைதானமாகவும் இருக்கும் என எண்ணியிருப்பதாக ரோகித் தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்ப இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் ஒரு மாற்றத்தை செய்துள்ளார்.
அதாவது முகமது சிராஜ் நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஷிவம் துபே நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொடுத்திருக்கிறார்.
எதிர்பார்த்தைப் போலவே சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல் இருவருக்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்படவில்லை. டி20 உலக கோப்பை போட்டிகளில் இதுவரை நடைபெற்ற ஒரு போட்டியில் கூட அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக களமிறக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேசும்போது, டாஸ் தங்களுக்கு சாதகமாக விழுந்திருந்தால் முதலில் பேட்டிங் ஆடவே திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால், டாஸ் தன் கன்ட்ரோலில் இல்லாத ஒன்று என்பதால், போட்டியில் முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாக கூறினார்.
ஏற்கனவே நியூசிலாந்து உள்ளிட்ட நல்ல அணிகளை வீழ்த்தியிருப்பதால், நல்ல கிரிக்கெட் விளையாடி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என தெரிவித்தார். அதற்கு எங்கள் அணிக்குள் எமோஷன்களை கட்டுபடுத்தி, சூழலுக்கு ஏற்ப விளையாட முயற்சிப்போம், இதுவரை நல்ல கிரிக்கெட்டுகளை ஆடியிருப்பதால் அதனை இப்போட்டியிலும் தொடருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.