கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் இருக்கும் பழங்களில் எண்களை கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சந்தைகளில் விற்கப்படும் பழங்கள், குறிப்பாக ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். இந்த ஸ்டிக்கர்கள் எதற்காக ஒட்டப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
பலரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் விலை உயர்ந்த ரகங்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அதற்காக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை. அவற்றின் உண்மையான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பழத்தில் உள்ள ஸ்டிக்கர் அதன் விலை அல்லது தரத்தை குறிக்க வில்லை. மாறாக, அது நமது ஆரோக்கியத்துடன் குறிப்பிடத்தக்க தொடர்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் பழங்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டன? இயற்கை முறையில் வளர்க்கப்பட்டதா, பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டுள்ளதா? மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டதா என்பதை குறிக்கிறது.
ஆப்பிள் அல்லது ஆரஞ்சில் 8 என்ற எண்ணில் தொடங்கும் 5 இலக்கக் குறியீட்டைக் கொண்ட பழ ஸ்டிக்கரை நீங்கள் கண்டால், அந்த பழம் மரபணு ரீதியாக மாற்றப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, 84569 என்ற ஸ்டிக்கர் இந்த வகைக்குள் அடங்கும்.
ஆப்பிள்கள் பொதுவாக 4-இலக்கக் குறியீடுகளைக் கொண்டிருக்கும். 4126 அல்லது 4839 போன்ற எண்களைக் கொண்ட ஆப்பிளை நீங்கள் வாங்கினால், அது பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயன மருந்துகள் பயன்படுத்தி பயிரிடப்பட்டது என்பதை குறிக்கிறது. இந்த பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு நன்கு கழுவுவது முக்கியம்.
9ல் தொடங்கும் எண்ணைக் கொண்டிருக்கும் ஆப்பிள்கள் இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை என்பதைக் குறிக்கிறது. அவற்றில் பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படவில்லை.