குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தை சேர்த்த தம்பதியரின், வலைகாப்பு அழைப்பிதழ் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழில் தம்பதியினர் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள் கொடு உறவுகளே என்னும் வாசகங்களையும் அச்சிட்டு தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
அழைப்பிதழில் உள்ள தகல்கள் படி இந்த விழாவானது அமமுக பிரமுகர் இல்ல விழா என தெரிகிறது. இதனிடையே இந்த அழைப்பிதழின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அமமுக-வின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த நிலைபாடு அனைத்து வகையிலும் மத்திய அரசுக்கு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்து வருகின்றனர்.
A couple uniquely shows solidarity with Anti-CAA protests on their baby shower...
Proud #AMMK'ian CAA_NRC_Protests #CAA_NPR_NRC#TTVDhinakaran pic.twitter.com/p8QnaN1J6U— Gomathi Sivam (@GomatiSivam) February 23, 2020
2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது.
என்றபோதிலும், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்களும், இந்த சட்டமானது "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என கூறி இதற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என தெரிவித்து வருகின்றனர். என்றபோதிலும் தமிழகத்தில் மாநில அரசு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்களது எதிர்பினை தெரிவிக்காமல், மறைமுகமாக ஆதரவு வெளிப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.