இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை ரசிகர்கள் உலக அளவில் ட்ரண்டாக்கி வருகிறார்கள். கிரிக்கெட் தெரியாத, புடிக்காதவர்களைப் கிரிக்கெட் பாக்கவைத்த பெருமை கண்டிப்பாக தோனிக்கும் உண்டு. இன்றும் கிரிக்கெட் தெரியவில்லை என்றாலும் தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸைப் பார்க்கவும், மின்னல் வேகத்தில் அவுட்டாக்கும் ஃபீல்டிங்கைப் பார்க்கவும் கிரிக்கெட் பார்ப்பவர்கள் பலர்.
சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் என்பதைத் தாண்டி மக்களைக் கவரும் மனிதன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
இந்த வரிசையில் வித்தியாசமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்துக் கூறியுள்ளார். மகேந்திர சிங் தோனி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடி வருகிறார். இதனால் சென்னை அவருக்குப் பழகிப்போன ஊர், மிகவும் பிடித்த ஊரும் கூட. சென்னை எனது இரண்டாவது வீடு என்றே கூறியிருக்கிறார் தோனி. மேலும் அவருடைய சி.எஸ்.கே டாக்குமெண்ட்ரியில் தமிழக ரசிகர்கள் என்னை தல என்று கூப்பிடுவார்கள் எனக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாலும் மிகவும் பிடித்தது. இப்போது எனக்கு அவர்கள் கூப்பிடுவதே பழகிவிட்டது. அதுவும் எனது பெயர் போலவே ஆகிவிட்டது என்று கூறியிருந்தார்.
என் நண்பன்!! என் தலைவன்!! ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் #தல
இப்பிடி சொல்லிட்டே போலாம் சோதனைகளை எல்லாம் சாதனையா மாத்துற ஒரு சக்தி #தோனி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நண்பா @msdhoni. @ChennaiIPL மக்களின் நிரந்தர சொந்தமே உலக கோப்பை வென்று வா #Dhoni #HBDThalaDhoni pic.twitter.com/zCloKV8RfN— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 7, 2019
ஹர்பஜன் சிங்கும் அப்படித்தான். சி.எஸ்.கேவுக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்தே, தமிழில் ட்வீட் செய்துவருகிறார். அவரது தமிழ் ட்வீட்டுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இதன் காரணமாக இன்று தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் ட்வீட் செய்திருக்கிறார். தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., ’’என் நண்பன், என் தலைவன், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல, இப்பிடி சொல்லிட்டே போலாம். சோதனைகளை எல்லாம் சாதனையா மாத்துற ஒரு சக்தி தோனி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நண்பா! சென்னை மக்களின் நிரந்தர சொந்தமே உலக கோப்பை வென்று வா! ’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.