தோனியுடன் ஒப்பிட வேண்டாம் -கடுப்படிக்கும் கெளதம் கம்பீர் @IPL

தோனியுடன் ஒப்பிடுவது தேவையில்லை என்று கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாத நிலையில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 6, 2020, 06:37 PM IST
  • 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டித்தொடரில் ரிஷப் பந்த் பிரபலமானார்.
  • தோனியுடன் ரிஷப் பந்தை ஒருபோதும் ஒப்பிட முடியாது- கம்பீர்
  • ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அணியில் இருந்து பந்த் வெளியேற்றப்பட்டார்
தோனியுடன் ஒப்பிட வேண்டாம் -கடுப்படிக்கும் கெளதம் கம்பீர் @IPL title=

தோனியுடன் ஒப்பிடுவது தேவையில்லை என்று கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாத நிலையில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல, விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் ரிஷப் பந்துக்கு நிறைய முன்னேற்றம் தேவை என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கெளதம் கம்பீர், ரிஷப் பந்த் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் எம்.எஸ்.தோனியுடன், ரிஷாப் பந்த் (Rishabh Pant) ஒப்பிடப்படுவது தவறு என்றும் கெளதம் கம்பீர் கூறுகிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கிய வீரராக இடம் பெற்றிருக்கும் ரிஷப் பந்த், தோனியின் இடத்தை நிரப்புவார் என்று பரவலாக பேசப்படுகிறது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டித்தொடரில் தனது திறமையால் அனைவரையும் வசீகரித்த ரிஷப் பந்த் பிரபலமானார். ஆனால்  ஐ.பி.எல் போட்டித்தொடரின் இந்த சீசனில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ரிஷப் பந்த் நிறைவேற்றவில்லை.

ஐபிஎல் 2020 பதிப்பில் இன்னும் அரைசதத்தை எட்டாத பந்த், 12 போட்டிகளில் 109.61 ஸ்ட்ரைக் வீதத்துடன் 285 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 23 வயதான ரிஷப் பந்த், தொடர்ந்து தனது அற்புதமான பேட்டிங் திறமையை நிரூபிக்க தவறிவிட்டார்.  

இந்த நிலையில், சுறுசுறுப்பான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் எம்.எஸ்.தோனியுடன் ரிஷப் பந்தை ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளது தற்போது கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

“ரிஷாப் பந்த் தான், அடுத்த எம்.எஸ் தோனி என்று சொல்வதை  முதலில், நிறுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக ஊடகங்கள் இந்த ஒப்பீடு செய்வதை நிறுத்த வேண்டும். பல ஊடகங்களும் இவ்வாறு தங்களது யூகங்களை தெரிவிக்கும்போது ரிஷப் பந்த் மீது அழுத்தம் ஏற்படுகிறது. அவர் ஒருபோதும் எம்.எஸ்.தோனியாக இருக்க முடியாது. அவர் ரிஷப் பந்தாகவே, தனது தனித்திறமையால் பிரத்யேகமாக ஒரு இடத்தைப் பெற வேண்டும், ”என்று கம்பீர் ESPNcricinfoவிடம் கூறினார்.

தோனியுடன் ஒப்பிடுகையில் ரிஷப் பந்துக்கு விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் நிறைய முன்னேற்றம் தேவை என்றும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.

Read Also | IPL 2020: மீண்டும் ஐ‌பிஎல் இறுதிப்போட்டிக்கு நுழைந்த மும்பை இந்தியன்ஸ்

"எம்.எஸ். தோனி சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு வரும்போதே பல அற்புதமான சிக்ஸர்களை அடித்திருந்தார். ரிஷப் பந்த் தோனியைப் போன்றே அநாயசமாக சிக்ஸர்களை அடிக்க முடியும் என்பதால் மட்டுமே, மக்கள் அவரை எம்.எஸ். தோனி போன்ற ஜாம்பவானுடன் ஒப்பிடத் தொடங்கினார்கள். ரிஷப் பந்த் தன்னை இன்னும் பல விதங்களில் மேம்படுத்த வேண்டியிருக்கிறது” என கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார் 

சரியாக விளையாடாததால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அணியில் இருந்து பந்த் வெளியேற்றப்பட்டார், சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் விக்கெட் கீப்பிங் விருப்பங்களாக தேர்வு செய்யப்படும் நிலையில் இருப்பதால் ரிஷப் பந்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

ஐபிஎல் 2020 இன் இரண்டாவது தகுதிப் போட்டியில் விளையாடும்போது, ரிஷப் பந்தின் தோளில் மிகப் பெரிய பொறுப்பு இருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற அணியை நவம்பர் எட்டாம் தேதியன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி  எதிர்கொள்ளும்.
ரிஷப் பந்தின் முன் இப்போது இந்த வாய்ப்பு ஒன்றே மிகப் பெரிய உடனடி வாய்ப்பாக இருக்கிறது என்பது கெளதம் கம்பீரின் கருத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News