India National Cricket Team: இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (IND vs ENG Test Series) விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
தற்போது இந்த தொடரில் சற்றே நீண்ட இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. பிப். 5ஆம் தேதி 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப். 15ஆம் தேதி அன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. மேலும், பிசிசிஐ (BCCI) முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியையே அறிவித்திருந்த நிலையில், மீதம் உள்ள மூன்று போட்டிகளுக்கான அணிகள் இன்று அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பாஸ்பாலை காலியாக்குமா இந்தியா?
குறிப்பாக, ஆரம்ப கட்ட ஸ்குவாடில் விராட் கோலி (Virat Kohli) இடம்பெற்றிருந்தாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது. அவருக்கு பதில் ரஜத் பட்டிதார் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேஎல் ராகுல் (KL Rahul), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஆகியோர் 2ஆவது போட்டியில் இருந்து விலக, சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார் ஆகியோரும் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் படிக்க | இந்திய அணியில் என்டிரியாகப்போகும் சீனியர் பிளேயர்..! ரஞ்சி டிராபியில் செஞ்சூரி
தொடர் சமநிலையில் இருப்பதால் அடுத்தடுத்த போட்டிகளை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இங்கிலாந்தின் பாஸ்பால் வியூகத்தை தவிடிபொடியாக்கி, இந்தியாவில் அது செல்லுபடியாகாது என நிரூபிக்கவும் ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் இணை கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது.
விராட் கோலி வர மாட்டார்...
எனவே, அடுத்தடுத்த போட்டிகளுக்காக விராட் கோலி அணிக்கு திரும்புவாரா, காயத்தில் இருந்து எந்த வீரர்கள் மீண்டு வருகிறார்கள், இல்லையெனில் எந்த இளம் வீரருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது ஆகிய கேள்விகள் ரசிகர்களிடம் உள்ளது. அதனால், பிசிசிஐ அறிவிக்கும் ஸ்குவாட் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அந்த வகையில் விராட் கோலி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளை போன்ற மீதம் உள்ள மூன்று போட்டிகளிலும் விளையாட வரமாட்டார் (Virat Kohli Ruled Out) என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுசார்ந்த பிரபல ஊடகம் வெளியிட்ட தகவலில் இதற்கான காரணம் ஏதும் கூறப்படவில்லை. விராட் கோலி - அனுஷ்கா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதாக மூத்த கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தனது யூ-ட்யூப் சேனலில் தெரிவித்திருந்த நிலையில், அது முற்றிலும் தவறான தகவல் என்று ஏபி டி வில்லயர்ஸே நேற்று மறுப்பும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
virat kohli extends leave pic.twitter.com/Xn2niy6H1i
— Akash Kharade (@cricaakash) February 10, 2024
விராட் கோலி அடுத்த மூன்று போட்டிகளில் வர மாட்டார் (Virat Kohli Replacement) எனும்பட்சத்தில் ஸ்குவாடில் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கும் வகையில் தேவ்தத் படிக்கலுக்கு (Devdutt Padikkal) வாய்ப்பளிக்கலாம். இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பிளேயிங் லெவனில் தேவ்தத் படிக்கலையும் சேர்க்க வேண்டியதன் காரணத்தையும் இதில் காணலாம்.
தேவ்தத் படிக்கல்: 2024இல் நான்கு சதங்கள்
தேவ்தத் படிக்கல் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை சீசனில் மிரட்டலாக ரன்குவித்து வருகிறார். அவர் 2024ஆம் ஆண்டில் மட்டும் நான்கு சதங்களை அடித்திருக்கிறார். குறிப்பாக, 150 ரன்களுக்கு மேல் இரண்டு முறை அடித்துள்ளார்.
அதாவது ரஞ்சி டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக 193 ரன்களையும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களையும், தமிழ்நாட்டுக்கு எதிராக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியிலும் 151 ரன்களை அடித்து ஆட்டமிழந்துள்ளார். இதற்கிடையே, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான போட்டியிலும் அவர் 105 ரன்களை அடித்து மிரட்டியிருக்கிறார்.
DDP has FOUR first-class hundreds this year - it's just Februarypic.twitter.com/tebilw7hyr
— Lucknow Super Giants (@LucknowIPL) February 10, 2024
இடது கை பேட்டரான தேவ்தத் படிக்கல் நம்பர் 3இல் இறங்கி பொறுமையாகவும், நிதானமாகவும் ரன்களை சேர்க்கக் கூடியவர். குறிப்பாக, ஸ்பின்னருக்கு எதிராக இவரின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. உதாரணத்திற்கு நேற்றைய தமிழ்நாட்டிற்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்களான சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோரை வெளுத்து வாங்கினார்.
இதில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் ஆகிய இருவரும் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள். படிக்கல் இவர்களை எவ்வித தடுமாற்றமும் இன்றி எதிர்கொண்டார். சாய் கிஷோரின் பந்துகளில் மட்டும் படிக்கல் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு, சேப்பாக்கம் ரசிகர்களுக்கு நேற்று விருந்து படைத்தார் எனலாம்.
மேலும் படிக்க | இஷானுக்கு பிசிசிஐ மேல் இதற்குதான் கோபமா...?! வெளியான புதிய தகவல்
தேவ்தத் படிக்கலுக்கு ஏன் வாய்ப்பளிக்க வேண்டும்?
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு வருவோம். இங்கிலாந்து அணியும் இந்தியாவுக்கு நிகராக சுழற்பந்துவீச்சாளர்களை இந்த சுற்றுப்பயணத்திற்கு தயார் செய்துள்ளது. அனுபவம் வாய்ந்த ஜாக் லீச் இருக்க இளம் சுழற்பந்துவீச்சாளர்களாக டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ரெஹான் அகமது ஆகியோரை அணியில் வைத்துள்ளது. இதில் ஹார்ட்லி மற்றும் லீச் இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் ஆவார்கள்.
ஜாக் லீச் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்தார் எனில், முதல் போட்டியை போலவே ஹார்ட்லி உடன் கூட்டணி சேர்ந்து இந்திய அணியின் பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. முதல் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. எனவே, ஹார்ட்லி மற்றும் லீச் போன்ற இடது கை சுழற்பந்துவீச்சாளர்களை அடித்து ஆட மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கலை பிசிசிஐ நிச்சயம் முயற்சிக்கலாம்.
படிக்கலை கவனிப்பது நல்லது
மிடில் ஆர்டரில் இடது கை வீரரின் தேவையும் உள்ளது. நம்பர் 3இல் சுப்மான் கில் விளையாடும்பட்சத்தில், நம்பர் 4இல் தேவ்தத் படிக்கலை விளையாட வைக்கலாம். இவர் சுழற்பந்துவீச்சு மட்டுமின்றி வேகப்பந்துவீச்சையும் நன்றாகவே எதிர்கொண்டார், இருப்பினும் அவருக்கு பவுண்சரில் இன்னமும் சில பிரச்னைகள் இருப்பதும் நேற்றைய ஆட்டத்தில் தெரிந்தது. ஆப் ஸ்பின் பந்துவீச்சை கூட அவர் நன்றாகவே சமாளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுல், விராட் கோலி இல்லாத பட்சத்தில் சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரையும் இந்திய அணி முயற்சித்து பார்க்கலாம். ஷ்ரேயாஸ் ஐயரும் சமீப காலமாக கடுமையாக சொதப்பி வருவதால் தேவ்தத் படிக்கல் படிக்கலை பிளேயிங் லெவனில் சேர்ப்பதிலும் பிரச்னை இருக்காது. ரஜத் பட்டிதாருக்கு போதிய வழங்கப்படவில்லை என்றாலும் அவரை போலவே ரஞ்சி டிராபியில் ஜொலித்த படிக்கலுக்கு வாய்ப்பளிக்காமல் விடுவதும் சரியாக இருக்காது என்பது பலரின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க | விராட் கோலி, பிசிசிஐ இடையே என்ன பிரச்சனை? எப்போது மீண்டும் திரும்புவார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ