3_வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இங்கிலாந்து? முற்றுபுள்ளி வைக்குமா இந்தியா?

இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெற்றி பெற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2018, 12:59 PM IST
3_வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இங்கிலாந்து? முற்றுபுள்ளி வைக்குமா இந்தியா? title=

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக அடுத்த நாள் ஆட்டம் ஆரம்பமானது. 

இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி  35.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது. இந்தியாவை விட 289 ரன்கள் அதிகமாக எடுத்தது. மீதம் ஒரு நாள் இருந்த நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணி எப்படியாவது ஆட்டத்தை "டிரா" செய்து விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில்,  இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தது. ஒருவரிடமும் போராட்ட குணம் காண முடியவில்லை. ஏதோ வந்தோம், போனோம் என்ற நிலையில் தான் இந்திய வீரர்கள் ஆடுனார்களா? என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க உள்ள நிலையில், இங்கிலாந்து ஆடுகளத்தில் இந்திய அணி வீரர்கள் தடுமாறி வருவது, ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வென்று விடும். அதேவேளையில் இந்திய அணி வெற்றி பெற்றோ, அல்லது டிரா செய்தோ தான் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். 

இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்ககூடும். வெற்றி பெற முடியாதா பல போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வென்று பாராட்டுக்களை பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அதே வேகம், அதே நிதானத்துடன் தற்போது செயல்பட்டால், தங்கள் மீதான விமர்சனங்கள் தூக்கி எறிய முடியும். 

இன்றைய போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. 

 

 

Trending News