10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும், 2-வது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியிடம் தோல்வி கண்டாலும், அடுத்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 179 ரன் இலக்கை எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது.
இரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 முறை வெற்றி கண்டு சமநிலை வகிக்கின்றன.
எனவே சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.