10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடரில் புனே அணி அபார பந்துவீச்சால் 27 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
பெங்களூருவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது. புனே அணியில் ரகானே, திரிபாதி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 63 ரன் சேர்த்த நிலையில், ரகானே (30) பத்ரி பந்தில் கிளீன்போல்டானார்.
அடுத்த ஓவரில் திரிபாதி (31) நேகி பந்தில் கோஹ்லியின் அபார கேட்சால் வெளியேறினார். 3 வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்மித், டோனி நிதானமாக ஆடி 58 ரன் சேர்த்தனர். 16 வது ஓவரின் கடைசி பந்தில் டோனி (28) ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ஸ்மித் (28) நடையை கட்டினார். கிறிஸ்டியன் (1), ஸ்டோக்ஸ் (2), தாகூர் (0). மனோஜ் திவாரி மட்டும் ஓரளவுக்கு ஆடி 27 ரன் எடுத்தார்.
20 ஓவரில் புனே அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் துவக்க ஆட்டக்காரர் மன்தீப் சிங் டக் அவுட்டானார். கேப்டன் கோஹ்லி 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் டிவில்லியர்சும் (29) நடையை கட்ட அடுத்தடுத்து விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல சரிந்தன. கேதார் ஜாதவ் (18), பின்னி (18), வாட்சன் (14), நேகி (10) ஆகியோர் புனே பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து தோற்றது. தாகூர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டும் உனாத்கட் 2, தஹிர் 1 விக்கெட் கைப்பற்றினர்.