சுதந்திர தினம் 2018: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!

இன்று 72வது சுதந்திர தினத்த்தில் மக்கள் அனைவருக்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2018, 06:51 AM IST
சுதந்திர தினம் 2018: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! title=

இன்று 72வது சுதந்திர தினத்த்தில் மக்கள் அனைவருக்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்!

பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்:-

72-வது சுதந்திர தினத்தில் நமது நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டிற்கு கிடைத்த இந்த முன்னேற்றம் ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைப்பதற்கான அறிகுறிகள் மத்திய அரசின் நல்லாட்சியின் மூலம் தென்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்கள் பெற்றுத்தந்த இந்த சுதந்திரத்தை அனைவரும் கொண்டாடும் வகையில் எனது சார்பிலும், தமிழக பா.ஜனதா சார்பிலும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்:- 

இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் முடிந்து, தற்பொழுது 72-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கின்றது. உலக நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் இன்று இந்தியா முன்னேறுவதற்கு பல தடை கற்கள் ஏற்பட்டுள்ளன. இவையெல்லாம் வருங்காலத்தில் மாற்றம் அடைந்து ஒரு முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகி அமைதியும், முன்னேற்றமும், அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், வகுப்பு ஒற்றுமை ஓங்கவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர நாள் வழிவகுக்கட்டும் என தே.மு.தி.க. சார்பில் எனது இனிய சுதந்திரதின வாழ்த்துகளை அனைத்து மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களின் மனநிலை ஊழலுக்கு ஆதரவாகவே உள்ளது. இவர்கள் திருந்துவதோ, தமிழகத்தை நல்வழியில் நடத்துவதோ சாத்தியமல்ல. இந்த அரசை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் நலன் காக்கும் அரசை அமைப்பதன் மூலமாக மட்டுமே சமத்துவமான, ஊழல் இல்லாத, மது மற்றும் புகையற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். எனவே, அந்த இலக்கை நோக்கி முன்னேற இந்தியாவின் சுதந்திர நாளான இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:- 

மத்திய மக்கள் விரோத, ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட மதசார்பற்ற அணிகளை தலைவர் ராகுல்காந்தியின் தலைமையில் ஒன்றிணைந்து மத்தியில் காங்கிரசின் நல்லாட்சி மலர்ந்திட நம்மை அர்ப்பணித்து, விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளை இன்று நினைவு கூர்ந்து சபதமேற்போம். இந்த சுதந்திர தினம் தொடங்கி, அடுத்த சுதந்திர தினத்திற்குள் இந்தியாவிலும், தமிழகத்திலும் மக்கள் விரும்பும் பல அதிசயங்கள் நிகழப் போகின்றன.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- 

சுதந்திர இந்தியாவில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகள், ஊழல், லஞ்சம், சுரண்டல், அத்துமீறல் போன்ற எந்தவொரு குற்றச்செயலுக்கும் இடம் இருக்கக்கூடாது என்பதற்காக அனைத்து நல்ல முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகக்கடினமாக பாடுபட்ட, உழைத்த அனைவரையும், தியாகிகளையும் நினைத்து மரியாதை செய்து அவர்களின் புகழ் பாடுவோம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:- 

எல்லோரும் எல்லாமும் பெற்றிட, சகோதர நேசம் ஓங்கிட, உலக அரங்கில் இந்திய நாடு உயர்ந்திட, இந்திய மக்கள் அனைவரும் உழைத்திட இந்த 72-வது சுதந்திர தினத்தில் உறுதி ஏற்றிடுவோம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:- 

நாடு முழுவதும் அமைதி நிலவ ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் சாதி, மத, இன, மொழி, பேதம் உள்ளிட்ட வேற்றுமைகளை களைந்து புதிய சமத்துவ சமுதாயம் உருவாக உழைப்போம். இந்த இனிய சுதந்திர திருநாளில் உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Trending News