கடலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது...!
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க உள்ளனர். மாநிலம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகக் கூடிய சூழல் எழுந்துள்ளது.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதால் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான மக்கள் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய சூழலில், மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளது சாமானிய மக்களை பாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறுகையில், அவசர சிகிச்சைகளையும், அறுவைச் சிகிச்சைகளையும் தாங்கள் புறக்கணிக்கப் போவதில்லை என்றும், மக்களுக்கு எந்த இடையூறும் இன்றியே போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு, மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனை, 67 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசரகால பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.