7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், டி.ஏ உயர்வு இப்போது இல்லை

இன்றைய பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்கள் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு அதிகரிக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு தான் நடக்கும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2021, 01:10 PM IST
7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், டி.ஏ உயர்வு இப்போது இல்லை title=

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 

மாநிலத்தின் நிதிநிலை சிக்கலான நிலையில் உள்ளது என்றும், அரசு அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் படிப்படியாகவே செயல்படுத்த முடியும் என்றும் நிதி அமைச்சர் அவர்கள் ஏற்கனவே வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்போது கூறியிருந்தார்.

 இந்த நிலையில், இன்றைய பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்கள் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு அதிகரிக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு தான் நடக்கும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

முன்னதாக, மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கூடும் என பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்தன.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தபட வேண்டும் என பல தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் வந்தன.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்திருந்தார். அவர் தனது கோரிக்கையில், 

“அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் இன்றியமையாப் பங்கினை வகிக்கும் பொது சேவையினை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதே போன்று, இளம் தலைமுறையினரைப் பண்பாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், செயல் வீரர்களாகவும் ஆக்கும் சக்தி வாய்ந்த கல்வியைக் கற்றுத்தரும் தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.

இப்படிப்பட்ட உன்னதமான பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியப் பங்கினை ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அ.தி.மு.க. அரசு உணர்ந்த காரணத்தினால், ஓராண்டுக்கு இருமுறை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், வீட்டுக்கடன் வசதி என, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. 

இந்தச் சூழ்நிலையில், கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, 1-1-2020, 1-7-2020, 1-1-2021 ஆகிய நாட்களிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இது 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தது. தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி, அதனை 1-7-2021 முதல் ரொக்கமாக வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

இதனைப் பின்பற்றி உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, புதுச்சேரி அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது.  இந்தச் சூழ்நிலையில், நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் எனப் பட்டியலிட்டு, நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கையினை வெளியிட்டு இருப்பதைப் பார்க்கும்போது, தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாதோ என்ற அச்சத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.  மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில், தங்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி,  தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி அதனை 1-07-2021 முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

முன்னதாக, இந்த மாத துவக்கத்தில், “மத்திய அரசு மற்றும் மற்ற மாநில அரசுகள் அறிவித்ததை போன்று தமிழகத்திலும் அகவிலைப்படி  (Dearness Allowance) உயர்வை அரசு அறிவிக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியிருந்தது. இது குறித்து மதுரையில் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம், கொரோனா பேரிடரில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இன்னும் சில மாநில அரசுகளும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. தமிழக அரசும் கொரோனா காலத்திலும் அயராது உழைத்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என அரசைக் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது, அடுத்த ஆண்டுதான் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயரும் என நிதி அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார். அரசின் நிதி நெருக்கடியை அரசு ஊழியர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News