3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை, வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
2018-19-ம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய பாடப்புத்தகம் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதைத்தொடர்ந்து 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும்.
2020 - 2021ம் கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல் அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, வடிவமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், முதல் பருவத்துக்கான பாட நூல்களை ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க இயலும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், 2020 - 21ம் ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை, வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக் குனருக்கு அனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.