தமிழ்நாட்டில் (Tamil Nadu) ஒரு கிராமம் சுமார் 35 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. வழக்கமாக தமிழகத்தில் இருக்கும் மின்சார துண்டிப்புதான் இதற்குக் காரணம் என நீங்கள் நினைத்தால், அது தவறு.
இந்த கிராமம் இருளில் மூழ்கியுள்ளதற்கு ஒரு இனிமையான, மனதை இதமாக்கும் ஒரு காரணம் உள்ளது. இதைக் கேட்டால் நிச்சயமாக உங்கள் முகத்தில் புன்னகை பூக்கும். தமிழகத்தின் சிவகங்கை (Sivagangai) மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில், ஒரு மாதத்திற்கும் மேலாக தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன. கிராமத்தின் பிரதான சுவிட்சுபோர்டில் Indian Robin என்றழைக்கப்படும் கருஞ்சிட்டு பறவை ஒன்று தனது முட்டைகளை இட்டுள்ளது. அந்த பறவையையும் அதன் முட்டைகளையும் காப்பாற்றவே அந்த கிராமத்தில் மக்கள் விரும்பியே இந்த இருளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கருஞ்சிட்டு பறவை மற்றும் அதன் முட்டைகளுக்காக ஏன் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். இதன் பின் உள்ள காரணத்தைப் பார்ப்போம்.
இப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அந்த கிராமத்தில் உள்ள ஏ.கருப்புராஜா என்ற கல்லூரி மாணவருக்கு முதலில் தோன்றியுள்ளது. பிரதான ஸ்விட்சுபோர்ட் அவரது வீட்டருகில்தான் உள்ளது. அதில் அந்தப் பறவை முட்டையிட்டிருப்பதை கருப்புராஜா கவனித்தார்.
ALSO READ: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!
லாக்டௌன் துவங்கியபோது அந்த பறவை பல குச்சிகளையும் சுள்ளிகளையும் சேகரிப்பதை கருப்புராஜா பார்த்துள்ளார். சில நாட்கள் கழித்து அவர் அந்த பறவையின் கூட்டிற்குள் பார்த்தபோது, அதில் பச்சை நீல வண்ணத்தில் மூன்று சிறிய முட்டைகள் இருப்பதைக் கண்டார்.
உடனடியாக அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அவர் இதற்காக கிராம மக்களை இதில் ஈடுபடுத்த முடிவெடுத்தார். Whatsapp குழுவில் அந்த பறவை மற்றும் முட்டைகள் பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அக்குழுவில் இருந்த 35 உறுப்பினர்களும், முட்டையிலிருந்து பறவைக் குஞ்சுகள் வெளிவரும் வரை அவற்றிற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க உறுதி பூண்டனர்.
அடுத்த வேலை, மீதமுள்ள கிராமவாசிகளையும் இதற்கு சம்மதிக்க வைத்து, சில நாட்களுக்கு இருட்டில் வாழ அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பதாக இருந்தது. சுமார் 100 பேரை சம்மதிக்க வைகக் வேண்டி இருந்தது. அனைவரும் இதற்கு உடன்பட்டால் தானும் ஒப்புக்கொள்வேன் என்ற நிபந்தனையுடன் பஞ்சாயத்துத் தலைவர் எச்.கலீஸ்வரி இதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு அனைத்து கிராமவாசிகளும் அந்த பறவை கூட்டத்திற்காக சில காலம் இருளில் வாழ ஒப்புக்கொண்டனர். மிகவும் இக்கட்டான இடத்தில் பறவையின் கூடு இருந்ததால், ஸ்விட்ச் போர்டை செயலாக்கினால், மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்தது. ஆகையால் அனைவரும் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டனர்.
இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி கேட்கும்போது உலகில் இன்னும் பல நல்ல உள்ளங்கள் உள்ளன என மனம் நிம்மதி அடைகிறது, மகிழ்ச்சி அடைகிறது. நமக்குத் தேவை ஏற்படும்போது, சொந்தங்களும் நட்புமே தூர விலகும் இக்காலத்தில், ஒரு பறவைக்காகவும் அதன் குஞ்சுகளுக்காகவும் ஒரு கிராமமே இருளை புன்னகையோடு ஏற்றுக்கொண்ட இந்த சம்பவம் உண்மையிலேயே நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒரு மனிதனுக்குள் யாராலும் இரக்கத்தை திணிக்க முடியாது. சில சூழ்நிலைகள் கல் போன்ற இதயங்களையும் உருக்கிவிடுகின்றன. நாம் செய்யும் மிகச் சிறிய செயல்களும் உதவிகளும் சிலருக்கு மிகப் பெரிய பயன்களைத் தருகின்றன. அப்படித்தான், இந்த கிராம மக்களின் செய்கை அந்த கருஞ்சிட்டு பறவையையும் அதன் குஞ்சுகளையும் காப்பாற்றியுள்ளது.
அவை இந்த கூட்டை விட்டு பறந்து செல்லும்போது வாயால் நன்றி கூறாமல் போகலாம். ஆனால், அவற்றின் மனதில் இருக்கும் நன்றி உணர்ச்சி அந்த கிராம மக்களை எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.