நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கபடும் என்று அச்சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்!!
பொதுவாக நடிகர் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அந்த 6 மாதகால அவகாசம் முடிவு பெற்றிருக்கும் நிலையில் இன்று நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதன் காரணமாக நடிகர் விஷால் மற்றும் கார்த்தி இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாசர், பொன்வண்ணன், “மிக மகிழ்ச்சியாக இந்த செயற்குழுக் கூட்டம் அமைந்தது. தேர்தலுக்காக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து அதன்பின்னர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் தேதியை ஓய்வுபெற்ற நீதிபதி அறிவிப்பார். தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. நடிகர் சங்க கட்டடம் சட்டப் பிரச்னைகளால் தாமதமானது. கட்டடப் பணி ஓராண்டுக்குள் நிறைவு பெறும். நாளை முதல் தேர்தல் வேலைகள் துவங்குகின்றன. நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் விஷால் போட்டியிடுவாரா என்பதை இப்போது கூறமுடியாது” என்று கூறினர்.