சென்னையில் சாலையோரக் கடைகள் வைப்பதற்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுக்களை விரைந்து பரிசீலிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாலையோரக் கடைகள் வைக்க இனி ஆதார் அவசியம் என்று உத்தரவிட்டது. ஒருமுறை அனுமதி பெற்றவர்கள் மீண்டும் முறைகேடாக அனுமதி பெறுவதைத் தடுக்கும்பொருட்டு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பள்ளி, கல்லூரிகளின் அருகில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்றும், பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஒரே நபர் பல்வேறு இடங்களில் சாலையோரக் கடைகளுக்கான அனுமதி பெற்று முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரை அடுத்து, உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.