பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எது வாங்க வேண்டுமானாலும் கையூட்டுக் கொடுத்தாக வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப் படாத சட்டமாகி விட்டது. எனவே இந்தப் பிரச்சினைக்கான் ஒரே தீர்வு சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை பெரு மாநகராட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும், கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்தவொரு சான்றிதழையும் கையூட்டுக் கொடுக்காமல் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனையுடன் கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நீதிபதி நேரில் அழைத்து தனது கண்டனங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கூறியுள்ள கருத்துகள் உண்மையானவை; தமிழகத்தில் நிலவும் யதார்த்த நிலையை பிரதிபலிப்பவை. சென்னை மாநகராட்சியில் மட்டும் தான் என்றில்லை... தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதே நிலை தான். பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எது வாங்க வேண்டுமானாலும் கையூட்டுக் கொடுத்தாக வேண்டும் என்பது எழுதப் படாத சட்டமாகி விட்டது. மாணவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் ஆகியவற்றை கூட கையூட்டு வாங்காமல் தர முடியாத அளவுக்கு அரசு அதிகாரிகள் இரக்கமற்றவர்களாகி விட்டனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று எத்தனையோ போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. மாறாக, வாங்கும் கையூட்டில் ஆளுங்கட்சியினர் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரிகள் பங்கு தரும் அளவுக்கு ஊழல் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
அரசு நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அனைத்து நிலையிலான ஊழல்களும் கண்டிக்கத்தக்கவை தான். ஆனாலும், இவற்றில் மன்னிக்கவே முடியாத ஊழல் என்பது ஏழைக் குடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையான சான்றிதழ்களை வழங்குவதற்குக் கூட கையூட்டுக் கேட்டு கொடுமைப்படுத்துவது தான். எந்த ஆதாரமும் இல்லாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி உதவி பெறுவதற்கு தேவையான சான்றுகளை வழங்கவும், கணவர் மறைந்த நிலையில் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற தாய் அவருக்கான அரசு உதவித் தொகையை பெறுவதற்கு தேவையான சான்றுகளைக் கொடுக்கவும் கையூட்டு வாங்குவதை விட மிகக்கொடூரமான குற்றம் எதுவும் இருக்க முடியுமா? இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இதற்கு ஆதரவாக மாறி ஊழல்வாதிகளைக் காப்பாற்றத் துடிப்பது தான்.
அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள், கட்டிட அனுமதி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு கையூட்டு பெறும் கொடுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவது தான். ஆனால், இந்த சட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை. சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற ஆணையிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்ட போது,‘‘தமிழ்நாட்டில் நட்புறவுடன் கூடிய மக்கள் நிர்வாகம், குடிமக்கள் அணுகுமுறை, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கால அவகாசம் ஆகிய திட்டங்கள் 1997 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருப்பதால் சேவை பெறும் உரிமைச் சட்டம் தேவையில்லை’’ என்று தமிழக அரசு விளக்கமளித்தது. அதையேற்று பொதுநல வழக்கை நீதிமன்றம் பைசல் செய்து விட்டது. மாறாக, பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அப்போது ஆணையிட்டிருந்ததால், அரசு அலுவலகங்களில் ஊழல்கள் அதிகரித்து விட்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே வேதனைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
இப்போதும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரே வழி பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றி செயல்படுத்துவது தான். சாதிச்சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின்இணைப்பு வழங்குதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை இந்த சட்டத்தின் மூலம் பெறமுடியும். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சேவை வழங்கப்படாவிட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்து தேவையான சான்றிதழ்களை பெறலாம். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5000 வரை இழப்பீடு பெற முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே, இனியும் தாமதிக்காமல், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு வழங்க வேண்டும். இதுதொடர்பாக தேவையான அறிவுரை மற்றும் ஆணையை தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.