ஜெயலலிதா மரணம் தொடர்பாக மார்ச் 2-வது வாரத்தில் ஆஜராகுமாறு அதிமுக முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியனுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்திருந்த நிலையில் ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையத்தில் பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை செய்து வருகிறார்.
அதன்படி நேற்று சமையலர் ராஜாம்மாள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் பார்த்து பேசினேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
அதை தொடர்ந்து, விசாரணை ஆணையத்தில் ஆஜராக அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இன்று மனோஜ் பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்கு தெரிந்த விவரங்கள் மற்றும் மருத்துவமனையில் பார்த்ததை அப்படியே கூறினேன் என தெரிவித்தார்.
மேலும் சசிகலா மீது ஜெயலலிதாவுக்கு எப்படியெல்லாம் சந்தேகம் இருந்தது என்பதையும் கூறினேன் எனவும் சசிகலா மன்னிப்புக் கடிதம் கொடுத்த விவரங்களையும் தெரிவித்து உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக மார்ச் 2வது வாரத்தில் ஆஜராகுமாறு மனோஜ் பாண்டியனுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.