அத்திவரதரை தரிசிக்க 27வது நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஜூலை 1 ஆம் தேதி முதல் காட்சியளிக்க தொடங்கிய அத்தி வரதர், தொடர்ந்து 27வது நாளான இன்று அத்திவரதர் இளம் நீலம் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று வார விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். சுமார். 2.5 கிலோமீட்டர் நீளம் பக்தர்கள் வரிசையுள்ளது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் விரைந்து தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.