வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!
நேற்று முன் தினம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரமரணம் அடைந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோர் ஆவார். இவர்களது உடல்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார். மேலும் வீரமரணம் அடைந்தவர்கள் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் நேற்று அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தற்போது, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami has announced government jobs to one family member each of the two CRPF personnel from the state who lost their lives in #PulwamaAttack. (file pic) pic.twitter.com/tN1VdHha4D
— ANI (@ANI) February 16, 2019