பாலியல் வழக்கில் பாதிக்கப்படும் சிறார், பெண்களின் விவரங்களை வெளியிட தடை: DGP

பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு DGP உத்தரவு!!

Last Updated : Mar 17, 2019, 12:46 PM IST
பாலியல் வழக்கில் பாதிக்கப்படும் சிறார், பெண்களின் விவரங்களை வெளியிட தடை: DGP title=

பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு DGP உத்தரவு!!

DGP அலுவலகத்தில் இருந்து, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும், சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்ட சிறார்கள் மற்றும் பெண்களின் பெயர்கள், அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்களை, சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் அறிக்கை தவிர்த்து, வேறு எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் அளித்த தீர்ப்பிலும் இதை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகள், பாலியல் வன்கொடுமை வழக்குகள், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர், அடையாளம், முகவரி உள்ளிட்ட எந்த விவரங்களையும், எந்த வடிவத்தில் அமைந்த தகவல் தொடர்பிலும் குறிப்பிடக் கூடாது.

காவல்துறை தொடர்பான சப்டிவிசனல் அலுவலகம், மாவட்ட அலுவலகம், சரக அலுவலகம், மண்டல அலுவலகம், தலைமை அலுவலகங்களுக்கு காவல்நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் எந்த தகவல் தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிடக்கூடாது என அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் இதே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் அடுத்தடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும் இது தவறாமல் தெரிவிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திலும் இது தவறாமல் அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த நெறிமுறை மீறப்படும் பட்சத்தில் அது தீவிரமாகக் கருதப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Trending News