கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குதண்டனையை உறுதி

கோவை சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்குதண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!!

Last Updated : Nov 7, 2019, 12:13 PM IST
கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குதண்டனையை உறுதி title=

கோவை சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்குதண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!!

கோவை ஒப்பணக்கார வீதியில் வசித்து வந்தவருடைய 10 வயது மகள் முஸ்கானும் 7 வயது மகன் ரித்திக்கும் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று வழக்கம் போல தனியார் வேனில் பள்ளிக்குச்சென்ற நிலையில் வீடு திரும்ப வில்லை. வேன் ஓட்டுநரான மோகன்ராஜ் என்ற மோகன கிருஷ்ணன் குழந்தைகளின் தந்தையைத் தொடர்பு கொண்டு, குழந்தைகளை கடத்தி விட்டதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறான். இது குறித்து குழந்தைகளின் தந்தை அளித்த புகாரின் பேரில் கோவை வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளை தேடி வந்த நிலையில், மறுநாள் குழந்தைகள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். 

இதையடுத்து மோகன் ராஜையும், உடந்தையாக இருந்த மனோகரனையும் கைது செய்து விசாரித்த போது, பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இருவரையும் தீபாளப்பட்டி அணைப் பகுதியில் உயிருடன் வீசிக் கொன்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர், காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு அழைத்து சென்ற போது, மோகன்ராஜ் காவல் ஆய்வாளரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்கமுயன்றபோது, என்கவுண்டரில் உயிரிழந்தார். 

இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் மனோகரனுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மனோகரனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.  

 

Trending News