சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‛நாடா' புயல், வலுவிழந்து நாளை அதிகாலை கடலூர் அருகே கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள நாடா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 28 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது புதுச்சேரியிலிருந்து 290 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள வானிலை தகவல் படி, ‛நாடா' புயலின் மேல் அடுக்கு மற்றும் கீழ் அடுக்கு இடையே காற்று வேறுபாடு அதிகமாக உள்ளது. எனவே அடுத்த, 12 மணி நேரத்தில் நடா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், மேலும் அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து கடலூர் இடையே நாளை அதிகாலை கரையை கடக்க கூடும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
கனமழை, வெள்ளப்பாதிப்பினால் கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டும் அதுபோல் வெள்ளச்சேதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலூர் அருகே புயல் கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் 40 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழுவினர் நாகை மாவட்டத்திற்கு சென்றடைந்துள்ளனர்.