நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்பு பற்றியது -இயக்குநர் பாரதிராஜா!

குரங்கணி மலையில் நடந்த தீ விபத்து குறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Mar 13, 2018, 08:13 AM IST
நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்பு பற்றியது -இயக்குநர் பாரதிராஜா! title=

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் நேற்று சென்றிருந்தனர். 

கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடை பெற்றது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். 

இந்நிகழ்வை தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளது...! 

தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து பற்றிக் கேள்விப்பட்டபோது, என் நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்பு பற்றிக் கொண்டதாய் நினைக்கிறேன். தேனி மாவட்டம், அன்பிற்கும் ஈரத்திற்கும் மட்டுமே பெயர் பெற்றது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட தீவிபத்து, எங்கள் மாவட்டத்திற்கே ஆறாத காயத்தை ஏற்படுத்திவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கள்ளிச் செடிகளுக்கு காயம் பட்டாலே கலங்கிப் போவேன். இத்தனை மனிதத் தளிர்கள் தீய்க்கு இரையானதையும், பெருங்காயம் பட்டுப் பெருந்துயர் கொண்டதையும் நினைத்துக் கலக்கமடைகிறேன். இந்த வெப்ப நேரத்தில் எப்படி தீப்பற்றியது என்பது திகைப்புதான். மூங்கிலோடு மூங்கில் உரசினாலே தீப்பற்றிக் கொள்ளும் என்பது உண்மை. 

இருந்தாலும், சமூக விரோதிகள் யாரேனும் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் என இயக்குநர் பாரதிராஜா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News