மக்களவையை வழிநடத்தும் மாற்று சபாநாயகர் பொறுப்பை தி.மு.க எம்.பி., ஆ.ராசா ஏற்றார்!
மக்களவையில் இன்று உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, “பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு கடன் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கலாம். வேண்டும் என்றால் கல்விக் கட்டணத்தையே கூட ரத்து செய்யலாம்.
ஆனால், அவர்களை 10% இடஒதுக்கீட்டுக்குள் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை மடைமாற்றுவற்கு சமம். பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு தர அரசியல் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்வி நிறுவன ஆசிரியர் பணிக்கு 10% இடஒதுக்கீடு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று ஆ.ராசா வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், துரோணாச்சாரியார்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏகலைவன்களாக எங்களால் இனிமேலும் இருக்க முடியாது என கூறி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்தும், சமூக நீதி குறித்தும் சிறப்பாக உரையாற்றினார்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு, மக்களவையை வழிநடத்தும் மாற்று சபாநாயகர் பொறுப்பையும் ஏற்றார். மூன்று முறைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிப்பவர்களை அவையின் இறுதி நேரத்தில் மாற்று சபாநாயகராகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்வது வழக்கம். அதன்படி, கடந்த வாரத்தில் டி.ஆர்.பாலு மாற்று சபாநாயகராகச் செயல்பட்டார்.
அ ராசா மாற்று சபாநாயகர் பொறுப்பு ஏற்ற போது கேரளாவின் மாவேலிக்கரை எம்பி சுரேஷ் கொடிகுனில் (காங்கிரஸ் கட்சி எம்பி) தங்கள் ஊர் பிரச்னை தொடர்பாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராசா நேரம் முடிந்துவிட்டதாகவும் அமைச்சர் பதில் அளிக்க வேண்டி உள்ளதாகவும் கூறினார். அதற்கு சுரேஷ் கொடிகுனில் மிக முக்கிய பிரச்னை, அமைச்சர் அப்புறம் பதில் அளிக்கட்டும் என்று ராசாவுக்கு பதில் சொல்லிவிட்டு பேசிக்கொண்டே இருந்தார். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலானது.
இன்று மாலை, மாற்று சபாநாயகராகச் செயல்பட்டு மக்களவையை வழிநடத்திய ஆ.ராசாவுக்கு தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.