சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன்: மத்திய அரசை பாராட்டிய ராமதாஸ்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன் அளித்த மத்திய அரசை பாராட்டிய பா.ம.க. நிறுவனர் இராமதாசு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 4, 2019, 03:10 PM IST
சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன்: மத்திய அரசை பாராட்டிய ராமதாஸ் title=

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன் அளித்த மத்திய அரசை பாராட்டிய பா.ம.க. நிறுவனர் இராமதாசு.

அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைக்கப்பட்டுள்ள தொகையை வழங்குவதற்காக தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்காக ரூ.20,167 கோடி கடன் வைத்துள்ளன. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்துள்ள தொகை மட்டும் ரூ. 1347 கோடி ஆகும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்துத் தருவதற்காக தனியார் சர்க்கரை ஆலைகளுடன் தமிழக அரசின் சார்பில் பலகட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், தங்களிடம் நிதி இல்லை என்று சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கூறி விட்டதால் உழவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை.

சர்க்கரை ஆலைகளின் பிடிவாதத்தால் கரும்பு உழவர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்காமலேயே போய்விடுமோ? என கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தான், சர்க்கரை ஆலைகளுக்கு மென் கடன் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மென்கடன் என்பது வட்டி இல்லாமல் வழங்கப்படும் கடன் ஆகும். வழக்கமாக சர்க்கரை ஆலைகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு 10% வட்டி வசூலிக்கப்படும். இப்போது வழங்கப்படுவது மென்கடன் என்பதால், சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய 10% வட்டியை, அதாவது ரூ.1054 கோடியை மத்திய அரசே செலுத்தும்.

தனியார் சர்க்கரை ஆலைகள் மொத்தம் ரூ.20,167 உழவர்களுக்கு வழங்க வேண்டியுள்ள நிலையில்,  அதில் பாதியளவுக்கும் கூடுதலாக மத்திய அரசு மென்கடன் வழங்கியுள்ளது. இதில் 10 விழுக்காடு, அதாவது சுமார் ரூ.1000 கோடி மென்கடன் தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்டால், அதைக்கொண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் சுமார் 70 விழுக்காட்டை  வழங்க முடியும். அந்தத் தொகை தமிழக கரும்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.

சர்க்கரை ஆலைகளுக்கு மென்கடன் வழங்குவதற்கு முன்பாகவே மற்றொரு சலுகையையும் மத்திய அரசு இரு வாரங்களுக்கு முன்பு வழங்கியது. சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை  கிலோ 29 ரூபாயிலிருந்து 31 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டது தான் அந்த சலுகை ஆகும். இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 6,200 கோடியும், தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 240 கோடியும் கூடுதல் லாபம் கிடைக்கும். இதையும் கணக்கில் சேர்த்தால் தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் உழவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 92.05 விழுக்காட்டை செலுத்தி விட முடியும். இது மிகப்பெரிய முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை.

அதுமட்டுமின்றி, சர்க்கரை ஏற்றுமதிக்கான 20% வரியை ரத்து செய்துள்ள மத்திய அரசு, இறக்குமதி வரியை 50 விழுக்காட்டிலிருந்து 100% ஆக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை நிலைத்தன்மை பெறும். இதன்மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு சற்று கூடுதல் லாபம் கிடைக்கும். அதைக்கொண்டு உழவர்களுக்கான நிலுவைத் தொகையை முழுமையாக அடைக்க முடியும்.

மத்திய அரசு அளித்துள்ள ரூ.10,540 மென்கடன் வசதி, சர்க்கரை விலை உயர்வு மூலம் ரூ.6,200 கோடி கூடுதல் லாபம், சர்க்கரை ஏற்றுமதிக்கான சலுகைகள் ஆகியவற்றின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக அடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இந்த வசதிகள் அனைத்தையும் தனியார் சர்க்கரை ஆலைகள் முழுமையாக பயன்படுத்தி கரும்பு உழவர்களின் கடனை அடைக்கின்றனவா? என்பதை கண்காணிக்க வேண்டியது தான் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் முக்கியக் கடமை ஆகும்.

எனவே, மத்திய அரசின் மென்கடன் உதவிபெற்ற சர்க்கரை ஆலைகள், அதைக் கொண்டு உழவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக தொழில்துறை, வேளாண் துறை அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்பு குழுக்களை அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Trending News