ஆளுநர் உரை வழக்கமான சடங்குபோல உள்ளது - வைகோ!

ஆளுநர் உரை வழக்கமான சடங்குபோல உள்ளதே தவிர, வேறொன்றும் புதிய அறிவிப்புகள் இல்லை 

Last Updated : Jan 8, 2018, 03:31 PM IST
ஆளுநர் உரை வழக்கமான சடங்குபோல உள்ளது - வைகோ! title=

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த உரை வழக்கமான சடங்குபோல உள்ளதே தவிர, வேறொன்றும் புதிய அறிவிப்புகள் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...

"தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆற்றிய உரை வழக்கமான சடங்குபோல உள்ளதே தவிர, வேறொன்றும் புதிய அறிவிப்புகள் இல்லை. தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 இல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அறிவித்த தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ன ஆயிற்று? என்ற விளக்கம் இல்லை. 

தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை ஆளுநர் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழக அரசின் கடன் ரூ.5 இலட்சத்து 75 ஆயிரம் கோடி என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டு நிதி மற்ற மாநிலங்களைவிட குறைந்திருப்பது பற்றி ஆளுநர் உரையில் குறிப்பிடாதது ஏன்? 

2011 ஆம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்களின் நிலைப்பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தால் உண்மை நிலை தெளிவாகி இருக்கும். அதே வெற்று அறிவிப்புகள்தான் இப்போதும் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. காவிரிப் பாசனப் பகுதிகளை நாசமாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்படாதது அதிமுக அரசின் கையறு நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.

கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை, விவசாய விளைபொருளுக்கு கட்டுபடியாகக்கூடிய விலை இல்லாமை குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 ஆகவும் தீர்மானிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருவதை அதிமுக அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.2000 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத்தர எந்த உத்தரவாதமும் ஆளுநர் உரையில் இல்லை.

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. சிறு, குறு தொழில்கள் பெரும் சரிவை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறன. இந்நிலையில், ஜப்பான் உதவியுடன் நான்கு தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது வெற்று அறிவிப்பாகவே இருக்கும். ஒக்கிப் புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் நடவடிக்கையை கடலோர காவல்படை டிசம்பர் 29 ஆம் தேதி நிறுத்திவிட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார். ஆனால், ஆளுநர் உரையில், மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடப்பதாகக் கூறப்பட்டு இருப்பது முரணாக இருக்கிறது. காணாமல் போன மீனவர்கள் குறித்து முழுமையான விபரங்கள் அளிக்கப்படாததும் ஏமாற்றம் தருகிறது.

நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்தும், மத்திய அரசு ஒப்புதல் வழங்காதது பற்றியும் ஏன் குறிப்பிடவில்லை? படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்படுத்த முன்வராதது ஏன்? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசு மணல் குவாரிகளை மூட வேண்டும், வெளிநாட்டு மணல் இறக்குமதி, செயற்கை மணல் உற்பதிக்கு அனுமதி தர வேண்டும் என்று உத்தரவிட்டதை தமிழக அரசு கண்டுகொள்ளாதது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு ஆளுநர் உரையில் பதில் இல்லை.

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்தும் ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது அதிமுக அரசின் அதிகார ஆணவத்தைக் குறிக்கிறது. மத்திய அரசிடம் மாநில உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடகு வைத்து வரும் அதிமுக அரசு தயாரித்து, ஆளுநர் சட்டமன்றத்தில் படித்த உரை கவைக்கு உதவாத ஏட்டுச்சுரைக்காய் மட்டுமே என்பது தெள்ளத் தெளிவாகிறது." என தெரிவித்துள்ளார்

Trending News