குட்கா ஊழல் ஆதாரம் அழிப்பு: சிபிஐ விசாரணை வேண்டும் - ராமதாஸ்

Last Updated : Jul 24, 2017, 03:13 PM IST
குட்கா ஊழல் ஆதாரம் அழிப்பு: சிபிஐ விசாரணை வேண்டும் - ராமதாஸ் title=

பல கோடி ரூபாய் குட்கா ஊழல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதைக்குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

பல கோடி ரூபாய் குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வருமானவரித்துறை அளித்த அறிக்கை மாயமாகியிருக்கிறது. தமிழக அரசின் தலைமைப்பீடமான தலைமைச் செயலகத்திலிருந்தே முக்கியமான ஆவணம் மாயமானதாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை. தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள குட்கா மற்றும் போதைப்பாக்குகள் ஊழலை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இச்சதியை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். கடைசியாக குட்கா ஊழல் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை யில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தாக்கல் செய்த மனுவில் வருமானவரித் துறையிடமிருந்து எந்த ஆவணமும் வரவில்லை எனக் கூறியிருந்தார்.

ஆனால், குட்கா ஆலைகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வருமானவரித்துறை சோதனைகள் தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலர் இராமமோகன்ராவை கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த வருமானவரித்துறையின் புலனாய்வுப்பிரிவு முதன்மை இயக்குனர் பாலகிருஷ்ணன், குட்கா நிறுவனத்திடமிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.39.91 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருமானவரித்துறை அறிக்கையை அளித்தார்.

இந்த அறிக்கை அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமாருக்கும் அனுப்பப்பட்டு, அதற்கான ஒப்புகையையும் வருமானவரித்துறை பெற்றுள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தலைமைச்செயலருக்கு வருமானவரித்துறை எழுதிய கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையையும் அவரது அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது. இவ்விவரங்கள் அனைத்தையும் இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 21-ம் தேதி அம்பலப் படுத்தியிருந்தேன்.

இந்த விஷயத்தில் இனியும் தப்பிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் தான், வருமானவரித் துறை அறிக்கை மாயமாகி விட்டதாகக் கூறி அடுத்தக்கட்ட நாடகத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தெரிகிறது. தங்களின் தவறை மறைக்கவும், தாங்கள் மிகவும் நியாயமாக நடந்து கொள்பவர்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்து வதற்காகவும் இதுபற்றி உள்விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இவையெல்லாம் தேர்ந்த ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

குட்கா ஊழலைப் பொறுத்தவரை காணாமல் போனதாகக் கூறப்படும் வருமானவரித்துறை அறிக்கையை மீண்டும் பெறுவது கடினமான விஷயமில்லை. வருமானவரித் துறையிடமிருந்து பெறப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் நகல் காவல் தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நிச்சயமாக இருக்க வேண்டும். அதை எடுத்து அதனடிப்படையில் விசாரணையைத் தொடரலாம் அல்லது வருமான வரித்துறையிடமிருந்தே நகலைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இப்படியெல்லாம் நடப்பதன் நோக்கம் என்ன? என்பது தான் இப்போது அவசரமாக, அவசியமாக விடை காணப்பட வேண்டிய வினா ஆகும்.

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரும், காவல் உயரதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு தவறுக்கு மேல் தவறுகளை செய்து வருகிறது. வருமானவரித்துறையிடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் பொய் சொன்ன அரசு, அடுத்தக்கட்டமாக தலைமைச் செயலகத்திலிருந்து முக்கிய ஆவணம் திருட்டு போய்விட்டதாக கூறுகிறது. தலைமைச் செயலகத்திலேயே திருட்டு நடக்கும் நிலை தான் நிலவுகிறது என்றால் இந்த பினாமி அரசு இனியும் எதற்கு நீடிக்க வேண்டும். உடனடியாக பதவி விலகி விடலாமே?

கடந்த ஆண்டு வருமானவரித்துறை அறிக்கை கையில் கிடைத்ததுமே அதன் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் தான் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் பல முக்கிய ஆதாரங்களைத் திரட்டிய சென்னை மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத அரசுக் போக்குவரத்துக் கழகத்தின் நெல்லைக் கோட்ட கண்காணிப்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஊழல்வாதிகளை காப்பாற்ற தமிழக அரசு எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்களாகும்.

தலைமைச் செயலகத்தில் இருந்த ஆவணங்கள் மாயமாகவில்லை; ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு விட்டது என்பது தான் எனது குற்றச்சாற்று ஆகும். இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை விசாரணையில் நியாயம் கிடைக்காது. எனவே, இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆவணங்களை அழித்து குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதற்காக முதல்வர் பழனிச்சாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News