ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வரலாற்று சிறப்பு மிக்க போராட்டமாக அது மாறியது. ஜல்லிக்கட்டுக்கான தடையும் மாணவர்கள் போராட்டத்தால் விலகியது.
இதன் பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்காகவும், குரல் கொடுக்க போவதாக இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்து இருந்தனர். இதன் காரணமாக மெரினாவில் மாணவர்கள் மீண்டும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் கடந்த 16 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நேற்று மாலையில் பரபரப்பான தகவல் சமூக ஊடகங்களில் பரவியது.
இதனையடுத்து மீண்டும் மெரினா கடற்கரை போராட்ட களமாக மாறிவிடக்கூடாது என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.