சட்டசபை சிறப்பு கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உலகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
நிரந்தர சட்டம் கொண்டு வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் நிறைவேற்றப்பட இருந்ததால் பல ஊர்களில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நாமக்கல், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, உளுந்தூர்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பழனி, கொடைக்கானல், வடமதுரை, உத்தமபாளையம், போடி, கம்பம், பெரியகுளம், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், ஆற்காடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், திருச்சி ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று காலை மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட சில ஊர்களில் போராட்டத்தை கைவிட மறுத்தனர். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று போராட்டம் நீடித்தது. அங்கு திரண்டு இருந்தவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனால் நேற்று அவர்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் மெரினா கடலை ஒட்டிய பகுதியில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரை பகுதிக்கு வரும் சாலைகளில் ஏராளமான பேர் திரண்டனர். அவர்களோடு சமூக விரோதிகளும், கூலிப்படை ரவுடிகளும் புகுந்ததால் பயங்கர கலவரமாக மாறியது.
முதலில் பேச்சுவார்த்தை அடிப்படையில் போராட்டத்தை சமாளித்த போலீசார், பின்னர் நிலைமை மோசமானதால் தடியடி பிரயோகம் செய்தனர்.
சிதறி ஓடிய ஆர்ப்பாட்டக் காரர்கள் தீவைத்து எரித்தனர். வழியில் நின்ற மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை எல்லாம் அடித்து நொறுக்கியபடி சென்றனர்.
மீன் மார்க்கெட் தீவைத்து எரிக்கப்பட்டது. ஆள் இல்லாத 2 குடிசைகளுக்கும் கலவரக்காரர்கள் தீவைத்தனர். மின்சார டிரான்ஸ்பார்மரும் தீப்பற்றி எரிந்தது.
பழைய டயர்களை சாலையில் போட்டு கொளுத்தினார்கள். அங்கிருந்த கார் ரிப்பேர் பார்க்கும் கடைக்கும் தீவைக்கப்பட்டது.
போராட்டத்தை எளிதில் சமாளித்துவிடலாம் என்று நினைத்த போலீசார் முதலில் லத்தியை கையில் எடுக்க வில்லை.